CSK, 2026 csk
கிரிக்கெட்

CSK-வின் சிறந்த பிளேயிங் 11.. 7 பௌலிங் ஆப்சன்.. NO.9 வரை பேட்டிங்! இதை செய்யுமா நிர்வாகம்..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஐபிஎல் சீசன்களாக வெற்றிபெறும் காம்பினேஷனை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகிறது..

Rishan Vengai

கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் சரியான வின்னிங் காம்பினேஷனை கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும் சிஎஸ்கே, ஆஃப் ஸ்பின்னர் இல்லாமை, பலவீனமான ஓப்பனிங், டெத் பவுலிங் குறைபாடு காரணமாக தொடர்ச்சியாக தோல்வி காண்கிறது. இதை சரிசெய்ய எந்த பிளேயிங் 11-ஐ பயன்படுத்த வேண்டும் என்ற வாய்ப்புகளை விவரிக்கிறது இக்கட்டுரை..

ஒரு ஐபிஎல் சீசனில் 7 தோல்விகள், 6 தோல்விகள் என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் 10 தோல்விகள், தொடர்ந்து கேப்டனாக 7 தோல்விகள் என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. கடந்த சீசனிலிருந்து இப்படித்தான் விளையாடிவருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

2025 சீசனைத் தான் சாமிக்கு விட்டாச்சு, இந்த சீசனிலாவது சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் கடந்த சீசனை போலவே வின்னிங் காம்பினேஷனை கண்டுபிடிக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

சிஎஸ்கே, 2026

எங்கே தான் இந்த அணி தவறுசெய்கிறது, நல்ல திறமையான வீரர்கள் இருந்தும் ஏன் வெற்றியை பெற முடியவில்லை, இனி எப்படி நாங்கள் நம்பிக்கை வைப்போம் என ஒருபக்கம் சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பித்தள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இந்தசூழலில் இந்த சிஎஸ்கே அணியில் என்ன மாற்றங்கள் செய்தால் அதுசரியான காம்பினேஷனாக இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்..

சிஎஸ்கேவின் பெரிய குறைகள் என்ன..?

ஆஃப் ஸ்பின்னர் இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 3 போட்டியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் அனைவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். முதல் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், இரண்டாவது போட்டியில் பிரியான்ஸ் ஆர்யா, கூப்பர் கானலி, 3வது போட்டியில் தேவ்தத் படிக்கல் என அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களும் சென்னை அணிக்கு ஆபத்தானவர்களாக மாறினர். அவர்களுக்கு எதிராக பந்துவீசக்கூடிய ஒரு ஆஃப் ஸ்பின்னர் கூட சென்னை அணியில் இல்லை.

சஞ்சு சாம்சன் - ருதுராஜ் கெய்க்வாட்

தொடக்க வீரர்கள் சோபிக்கவில்லை

கடந்த ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே, இந்த சீசனில் நம்பர் 3 வீரராக களமிறக்கப்படுகிறார். தொடக்க வீரர்களாக களமிறங்கக்கூடிய சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். ஓப்பனிங் செய்யக்கூடிய சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாதன் எல்லீஸ்

டெத் பவுலிங் இல்லை

நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் கடைசி 5 ஓவரில் மட்டுமே கிட்டத்தட்ட 100 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர் சிஎஸ்கே அணியின் பவுலர்கள். அணியில் டெத் பவுலிங் இல்லை என்பதையே இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நாதன் எல்லிஸ் என்ற ஒரு டெத் ஓவர் பவுலரை மட்டுமே வைத்துக்கொண்டு, அவருக்கு மாற்றுவீரரை ஏலத்தில் எடுக்காமல் போனது சென்னை அணிக்கு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது. டெத் பவுலிங் ஆப்சனிற்கு சென்னை அணியில் பெஞ்சில் கூட ஆள் இல்லை என்பது தான் மிகப்பெரிய சோகமான விஷயம்.

குறைகளை களையும் சிறந்த பிளேயிங் 11..

முதலில் அணியில் இருக்கும் மிகப்பெரிய குறைகளான ஆஃப் ஸ்பின்னர் தேவை, அதிரடி தொடக்கம் போன்றவற்றை களையும் ஒரு வீரராக மேட் ஷார்ட் அணியில் இருக்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5 விக்கெட் ஸ்பெல்லையும் வீசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக்பேஷ் லீக்கில் பவர்பிளேவில் வீசி விக்கெட் வீழ்த்தும் பவுலராகவும், 7 எகானமியுடன் வீசக்கூடியவராகவும் வாய்ப்பை வழங்குகிறார்.

அதுமட்டுமில்லாமல் தொடக்க வீரராக களமிறங்கி 2 சதங்கள் அடித்திருக்கும் இவர், பிபிஎல்லில் 230 ரன்கள் சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து கொடுத்துள்ளார். 500+ ரன்கள் சீசனையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தசூழலில் மேட் ஷார்ட் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரையும் தொடக்க வீரர்களாக பயன்படுத்துவது, இதுவரை சிஎஸ்கே அணியின் வின்னிங் ஓப்பனிங் காம்பினேஷனாக இருக்கும் ஒரு ஃபாரின் பேட்டர், ஒரு இந்தியன் பேட்டர் யுக்தி இந்தமுறையும் கைகூட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஆஃப் ஸ்பின்னர் இல்லை என்ற குறையையும் மேட் ஷார்ட்டால் போக்க முடியும்.

மேத்யூ ஷார்ட்

அதேபோல நம்பர் 3-ல் சஞ்சு சாம்சன், நம்பர் 4-ல் ருதுராஜ் கெய்க்வாட், நம்பர் 5-ல் ஷிவம் துபே இருப்பது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் சரியில்லை என்ற மிகப்பெரிய குறையை சரிசெய்ய முடியும். அதேபோல டெவால்ட் பிரேவிஸ் வந்துவிட்டால், நம்பர் 6 இடத்தில் பயன்படுத்தினால் அணியின் மிடில் ஆர்டர் குறைபாடு முற்றிலுமாக நீக்கப்படும். பிரேவிஸ் வரும்வரை அந்த இடத்தில் சர்பராஸ் கானை பயன்படுத்தலாம்.. தற்போது அணியில் ஃபார்முடன் இருக்கும் ஒரு வீரர் என்பதால் அவரால் மிடில் ஓவரில் ஸ்பின்னர், பேஸர் இருவரையும் அட்டாக் செய்யமுடியும்.

குர்ஜப்னீத் சிங்

நம்பர் 7 வீரராக ஜேமி ஓவர்டன், நம்பர் 8 இடத்தில் அகீல் ஹொசனை களமிறக்கினால், சிஎஸ்கே அணியால் எளிதாக 240 ரன்களை எட்டமுடியும். மேலும் அகீல் ஹொசைனாலும் பவர்பிளேவிலும், மிடில் ஓவரிலும் எகானமி ஓவர்களை கொடுக்கமுடியும். நம்பர் 9-ல் நூர் அகமது, நம்பர் 10-ல் கலீல் அகமது, நம்பர் 11-ல் குர்ஜப்னீத் சிங்கை களமிறக்க வேண்டும். புதிய பந்தில் ஸ்விங் செய்யக்கூடிய குர்ஜப்னீத் சிங், ஸ்லோவர் பந்துகளையும், டெத்தில் யார்க்கர் பந்துகளையும் வீசக்கூடிய வேரியேசன்களை வைத்துள்ளார். இந்த 11 வீரர்கள் உடன் அன்ஷுல் கம்போஜ் இம்பேக்ட் சப்பாக 12வது வீரராக பயன்படுத்தப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குறைகள் அனைத்துமே களையப்படும்.

CSK பெஸ்ட் 11..

1. மேட் ஷார்ட்

2. ஆயுஷ் மாத்ரே

3. சஞ்சு சாம்சன்

4. ருதுராஜ் கெய்க்வாட்

5. ஷிவம் துபே

6. சர்ஃபராஸ் கான்

7. ஜேமி ஓவர்டன்

8. அகீல் ஹொசைன்

9. நூர் அகமது

10. கலீல் அகமது

11. குர்ஜப்னீத் சிங்

இம்பேக்ட் வீரர்கள் - அன்ஷூல் கம்போஜ், உர்வில் பட்டேல், ராகுல் சாஹர், கார்த்திக் சர்மா

அகீல் ஹொசைன்

டெவால்ட் பிரேவிஷ் அணிக்கும் திரும்பும் பட்சத்தில் நூர் அகமதுவிற்கு பதில் ராகுல் சாஹரை பயன்படுத்தி, நூர் அகமதுவை வெளியேற்றினால் அணி பேலன்ஸை தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் நூர் அகமது இல்லாத குறையை ராகுல் சாஹர் நீக்க வேண்டும். அப்படி நூர் அகமது வெளியே செல்ல முடியாதென்றால் சென்னை அணிக்கு 6 பவுலிங் ஆப்சன் மட்டுமே கிடைக்கும், ஒரு வேளை மேட் ஷார்ட் வெளியேற்றப்பட்டால் ஆஃப் ஸ்பின் இல்லாத குறை மீண்டும் தலைதூக்கும். அகீல் ஹொசைன் வேண்டாம் என்றால், பிரசாந்த் வீர் மேல் நம்பிக்கை வைத்து அவருக்கு பவுலிங் கொடுக்க வேண்டும்.

டெத் ஓவரை பொறுத்தவரையில் குர்ஜப்னீத் சிங், அன்ஷூல் கம்போஜ் இருவரையும் மெய்ன் பவுலர்களாக பயன்படுத்தலாம், அணியில் மேட் ஷார்ட், அகீல் ஹொசைன், நூர் அகமது இருந்தால் 3 வெரைட்டி ஸ்பின்னர்களை வைத்து சிறந்ததை செய்யமுடியும். ஆக மொத்தம் சென்னை அணியிடம் வீரர்கள் இல்லாமல் இல்லை, எந்த வீரர்களை எங்கு பயன்படுத்தவேண்டும் என்ற யுக்தியை இன்னும் சென்னை அணி கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது.

நூர் அகமது

14 கோடிக்கு எடுத்துவிட்டோம் என்பதற்காக கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீரை ஆடவைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை, 9.25 கோடிக்கு கிருஷ்ணப்பா கௌதமை ஏலம் எடுத்து அணி காம்பினேஷனுக்காக பெஞ்சில் அமரவைத்த வரலாறு சென்னை அணிக்கு உண்டு. அதனால் வீரர்களின் பிரைஸ் டேக்கை மறந்துவிட்டு, அணி வெல்லக்கூடிய காம்பினேஷனை சென்னை அணி கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது. இது சென்னை அணி கம்பேக் கொடுக்க வேண்டிய நேரம்..