சில ஆண்டுகளுக்கு முன்னால், தோனி செய்ததைப் போலவே, அஷ்வினும் தொடருக்கு நடுவே ஆஸ்திரேலிய மண்ணில் ஓய்வை அறிவித்திருக்கிறார். மழைக்கு இடையே நடந்துகொண்டிருந்த இந்த ஐந்தாவது நாள் ஆட்டத்தில், பேசுபொருளாக மாறினார் அஸ்வின்.
காலை முதலே மூத்த வீரர் ஒருவர் ஓய்வு பெற இருப்பதாக பத்திரிகையாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள் அதற்கேற்ப அஸ்வினும், விராட் கோலியும் அமர்ந்து பேசும் காட்சி வெளியானது. அஸ்வின் மிகவும் எமோஷனலாக காணப்பட்டார். அப்போதே அஸ்வின் ஓய்வு பெறவிருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதை தற்போது உறுதி செய்திருக்கிறார் அஸ்வின்.
இந்தியாவின் G.O.A.T. என அஸ்வினை தீர நிச்சயமாய் சொல்லலாம். பெரும்பான்மையான இந்திய பவுலர்களுக்கு பேட்டிங் எல்லாம் கடினம். ஆனால், அஸ்வினால் டெஸ்ட் போட்டிகளிலும் நிலைத்து நின்று ஆட முடியும். டெஸ்ட், டி20 , ஒரு நாள் என மூன்றிலும் தன் அசாத்திய திறமையின் மூலம் எதிரணி வீரர்களை திணறடித்தவர் அஸ்வின். ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டிருந்தாலும், இந்திய அணிக்கான கேப்டனாக அவர் இறுதிவரையில் நியமிக்கப்படவேயில்லை. அஸ்வின் கரியரில் அதுவொன்றுதான் மிகப்பெரிய குறையாக இருந்தது. ஆனால், அது அஸ்வினுக்கான இழுக்கு அல்ல. பிசிசிஐக்கான இழுக்கு.
தொடருக்கு இடையே ஏன் ஓய்வை அறிவித்திருக்கிறார் அஸ்வின் என்னும் கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. இந்தியாவில் தன் கடைசி டெஸ்ட்டை அஸ்வின் ஆடியிருக்க வேண்டும். சென்னையில் ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பார்க்க முடிகிறது. பேட்டிங்கில் சச்சின் செய்த சாதனைகளுக்கு இணையாக பவுங்கில் சாதனைகளை தன் வசமாக்கியிருக்கிறார் அஸ்வின். எல்லோரையும் அவுட்டாக்கும் திறமை அஸ்வினிடம் இருந்தது. ஆனால், யதார்த்தம் வேறு மாதிரியாக இருக்கிறது.
38 வயதான அஸ்வின் இந்திய அணிக்காக ரெட் பால் கிரிக்கெட்டில் மட்டுமே ஆடி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரின் மீதமிருக்கும் போட்டிகளிலும் அஸ்வின் பெஞ்ச்சில் அமர்த்தப்படவே வாய்ப்பதிகம். இதற்கடுத்து ஜூன் மாதம் தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை விளையாடவிருக்கிறது. அதுவும் ஆறு மாதங்கள் இடைவெளி இருக்கிறது. இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. ஆனால், அந்த ஸ்குவாடில் அஸ்வினை சேர்ப்பார்கள் என்பது சந்தேகமே. இதற்கு முந்தைய சீசனிலும் அஸ்வின் பெஞ்ச்சில்தான் அமர வைக்கப்பட்டிருந்தார்.
ஜூனில் நடக்கும் இங்கிலாந்து தொடருக்கு பின்னர் , அக்டோபரில்தான் அடுத்த டெஸ்ட் தொடரை இந்தியா ஆடவிருக்கிறது. அந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வின் ஆடுவதற்கு கிட்டத்தட்ட 10 மாதங்கள் காத்திருக்கிறது. அது இந்திய மண்ணில் நடக்கும் தொடர் என்பதால், நிச்சயம் அஸ்வின் இடம்பெறுவார். ஆனால், போட்டிகள் விரைவாக முடிந்தாலே, ஃபிளைட் பிடித்து வந்து TNPLல் கவனம் செலுத்தும் அஸ்வினுக்கு இது வேண்டாத கால விரயம். அதனாலேயே அவர் இந்த திடீர் ஓய்வை அறிவித்திருக்கக்கூடும்.
சச்சினுக்காக ஒரு டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்தியது பிசிசிஐ. நம் மண்ணின் ஆகச்சிறந்த ஆல் ரவுண்டரான அஸ்வினுக்கு அப்படியான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமா என்பது சந்தேகமே.