Miss India USA 2024 வென்ற அமெரிக்கவாழ் இந்திய பெண்.. சென்னைக்கும் இவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு!
கடந்த ஒரு வாரகாலமாக உலகம் இந்தியாவை திரும்பிபார்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டை பார்க்கிறது. அதற்கு காரணம் கடந்தவாரம் செஸ் போட்டியில் உலக கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றிருந்தார் குகேஷ். இவர் இந்தியாவுக்கு மட்டுமன்றி தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து தந்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது வாஷிங்டன் நியூ ஜெர்சியில் நடந்த 2024 மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தை சென்னையில் பிறந்த, இந்திய அமெரிக்க இளம்பெண் கெய்ட்லின் சாண்ட்ரா நீல், பெற்றுள்ளார். இதன்மூலம் மீண்டுமொருமுறை தமிழ்நாட்டின் மீது அமெரிக்காவின் பார்வை விழுந்துள்ளது. நியூ ஜெர்சியில் இந்திய விழாக் குழு ஏற்பாடு செய்த மிஸ் இந்தியா யுஎஸ்ஏ மற்றும் மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ, மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியின் மூன்று பிரிவுகளில் 25 மாகாணங்களில்இருந்து 47 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களில் 19 வயதான கெய்ட்லின், மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தைப் பெற்றார். மேலும் இல்லினாய்ஸைச் சேர்ந்த சம்ஸ்கிருதி ஷர்மா மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும், வாஷிங்டனைச் சேர்ந்த அர்ஷிதா கத்பாலியா மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தையும் வென்றனர்.
இவர்களுக்கு ரிஜுல் மைனி, மிஸ் இந்தியா யுஎஸ்ஏ 2023 மற்றும் சினேகா நம்பியார், மிசஸ் இந்தியா யுஎஸ்ஏ 2023 ஆகியோர் முறையே மகுடம் சூட்டினர்.
மிஸ் இந்தியா யுஎஸ்ஏ போட்டியில் இல்லினாய்ஸைச் சேர்ந்த நிராலி தேசியா மற்றும் நியூ ஜெர்சியைச் சேர்ந்த மனினி படேல் ஆகியோர் முதல் ரன்னர் அப் மற்றும் இரண்டாவது ரன்னர் அப் என அறிவிக்கப்பட்டனர்.
மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ போட்டியில் வர்ஜீனியாவைச் சேர்ந்த சப்னா மிஸ்ரா மற்றும் கனெக்டிகட்டைச் சேர்ந்த சின்மயி அயாச்சித் ஆகியோர் முதல் மற்றும் இரண்டாவது ரன்னர் அப்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டத்தைப்பெற்ற கெய்ட்லின் டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிணி துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெற்றி பெற்றதும், செய்தியாளர்கள் சந்திப்பில், "நம் சமூகத்தில் எப்போதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவே நான் விரும்புகிறேன். பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் பிறந்த கெய்ட்லின் கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.