ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடியபோது அனுபவித்த அவமானங்கள் பற்றியும், அணியிலிருந்து வெளியேறுகிறேன் என கண்ணீருடன் பேசியது பற்றியும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் பேசியுள்ளார்.
டி20 கிரிக்கெட்டின் முன்னோடி கிறிஸ் கெய்ல் என்று கூறினால் பொய்யாகாது. தன்னுடைய அதிரடியான பேட்டிங் மற்றும் சிக்ஸ் ஹிட்டிங் திறமையால் டி20 கிரிக்கெட்டை அதிகப்படியான ரசிகர்களிடம் எடுத்துச்சென்றவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல்.
டி20 கிரிக்கெட்டில் 10000 ரன்கள் அடித்த முதல் வீரர், அதிகபட்ச டி20 தனிநபர் ஸ்கோர் (175 ரன்கள்), அதிவேக டி20 சதம் (30 பந்துகள்), ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் (18), டி20 கிரிக்கெட்டில் 100-க்கும் மேற்பட்ட அரைசதங்கள் அடித்திருக்கும் ஒரே வீரர் என்ற பல சாதனைகளை வைத்திருப்பவர் கிறிஸ் கெய்ல்.
ஐபிஎல்லில் 142 போட்டிகளில் கிட்டத்தட்ட 5000 ரன்களை அடித்திருக்கும் கிறிஸ் கெய்ல், ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளின் ஜாம்பவான் வீரராக கொண்டாடப்படுகிறார். ஐபிஎல்லில் 6 சதங்கள் மற்றும் 31 அரைசதங்களையும் அடித்துள்ளார்.
தன்னுடைய ஐபிஎல் பயணம் பஞ்சாப் அணியுடன் 2021-ல் ஒரு மோசமான அவமரியாதையுடன் முடிவடைந்ததாக கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
பஞ்சாப் அணிக்காக 41 போட்டிகளில் 40 சராசரியுடன், ஒரு சதம் 10 அரைசதங்கள் மற்றும் 1304 ரன்கள் அடித்தபோதும் அப்பயணம் கசப்பான அனுபவத்துடன் முடிந்ததாக கிறிஸ் கெய்ல் பேசியுள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கும் கிறிஸ் கெய்ல், “பஞ்சாப் அணியில் நான் அவமதிக்கப்பட்டேன். IPL தொடருக்கு பெரிய பங்காற்றிய மூத்த வீரர் என்ற மரியாதை எனக்கு அளிக்கப்படவில்லை. அவர்கள் என்னை சிறுபிள்ளை போல நடத்தினார்கள். என் வாழ்க்கையில் முதல் முறையாக, நான் மனச்சோர்வில் சிக்குவது போல் உணர்ந்தேன்.
அணியை விட்டுச் செல்வதாக கும்ப்ளேவிடம் (அப்போதைய தலைமை பயிற்சியாளர்) பேசியபோது நான் அவமதிக்கப்படுவதாகவும், எனக்கு ஏமாற்றத்தை கொடுப்பதாகவும் மனமுடைந்து அழுதேன்.
அப்போதைய கேப்டன் கேஎல் ராகுல் என்னை அழைத்து, 'போகாதீர்கள் இருங்கள்.. அடுத்த போட்டியில் விளையாடுங்கள்' என கூறினார். 'உங்களுக்கு வாழ்த்துகள்' என்று மட்டும் கூறிவிட்டு பெட்டியை கட்டிக்கொண்டு பாதியிலேயே கிளம்பி விட்டேன்.
அந்த கட்டத்தில், பணம் ஒன்றுமில்லை. என்னுடைய மன ஆரோக்கியம்தான் மிகவும் முக்கியமானது என்று தோன்றியது. நான் என்னை உள்ளுக்குள் அழித்துக் கொள்வது போல் உணர்ந்தேன். அப்படியான மனச்சோர்வை உணர்ந்தது அதுதான் முதல் முறை. உள்ளுக்குள் நான் உடைந்து போனேன்” என்று கிறிஸ் கெய்ல் தன்னுடைய மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.