ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் pt web
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி | இந்திய அணிக்குள் அதிருப்தி? என்ன நடக்கிறது?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நாளை தொடங்குகிறது ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி தொடர். ஆனால், இந்திய அணிக்குள் அதிருப்திகள் நிகழுவதாக வெளிவரும் செய்திகள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Angeshwar G

சாம்பியன்ஸ் டிராபி

ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது. ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கவிருக்கும் தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து என 8 அணிகள் விளையாட இருக்கின்றன.

கம்பீர்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டப்பின், இந்திய அணி விளையாடும் முதல் ஐசிசி தொடர் என்பதால் இந்திய அணிக்கும், கம்பீருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி பங்களாதேஷுக்கு எதிராக தனது முதல் போட்டியை இந்திய அணி விளையாட இருக்கும் நிலையில், அணிக்குள் வீரர்களிடையே அதிருப்திகள் இருப்பதாக வெளியாகும் செய்திகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.

வெளிப் புறக்காரணிகள் காரணம்

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷப் பந்த் பேக் அப் விக்கெட் கீப்பராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் ப்ளேயிங் 11லும், விக்கெட் கீப்பராகவும் தனது பெயர் இல்லாததற்கு காரணம் ‘வெளிப்புறக் காரணிகள்’தான் காரணம் என ரிஷப் பந்த் நம்புவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் ரிஷப் பந்த் எனும் பெயர் இல்லாவிட்டாலும், அது ரிஷப் பந்தைக் குறிக்கும் செய்திதான் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட்

விக்கெட் கீப்பர் தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீர் கூறுகையில், “தனிநபர்களைப் பற்றி பேசுவது கடினமான விஷயம். ரிஷப் பந்திற்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மட்டுமே என்னால் சொல்லமுடியும். ஆனால், விக்கெட் கீப்பருக்கான முதல் தேர்வாக கே.எல்.ராகுல்தான் இருப்பார்; அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

செயல்பாடுகள் எப்படி?

மூன்று ரக கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டார். அவர் மிக மோசமான விபத்தில் சிக்கி சிகிச்சையிலிருந்தபோது பல வீரர்களும் விக்கெட் கீப்பராக செயல்பட்டனர். காயத்திலிருந்து மீண்டு வந்த பந்த் டெஸ்ட் அணியில் தனது இடத்தினை மீண்டும் உறுதிப்படுத்தினார். டி20 போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துவிட்டார்.

உதாரணத்திற்கு, கடந்தாண்டு நடந்த டி20 உலகக்கோப்பையிலும் கூட அதிக விக்கெட்கள் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ரிஷப் பந்த்தான் முதலிடத்தில் உள்ளார். 8 போட்டிகளில் 13 கேட்ச்கள், 1 ஸ்டெம்பிங் என 14 விக்கெட்களை ரிஷப் பந்த் எடுத்துள்ளார். இரண்டாமிடத்திலுள்ள லிட்டன் தாஸ் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஒருநாள் போட்டிகளில் கே.எல். ராகுல் விக்கெட் கீப்பர் இடத்தினை பிடித்துவிட்டார்.

கே.எல்.ராகுல், சாம்பியன்ஸ் டிராபி

சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்கூட கே.எல்.ராகுல்தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். மூன்று போட்டிகளிலும் பந்த் பெஞ்சில்தான் இருந்தார். எனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் கே.எல்.ராகுல்தான் முதல்தேர்வு விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையே பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கம்பீர் கூறுவதுபோல் கடந்த ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில், 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்களை வெளியேற்றியுள்ளார். அதில், 16 கேட்ச்களும் ஒரு ஸ்டெம்பிங்கும் அடங்கும். கே.எல்.ராகுல் பினிஷராகவும் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.