புதிய தேர்தல் ஆணையர் | யார் இந்த கியானேஷ் குமார்?
மக்களவைத் தேர்தல் மற்றும் இந்த வருடம் நடந்த டெல்லி சட்டசபை தேர்தல் ஆகியவற்றை நடத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செவ்வாய்க்கிழமை பதவி ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ள கியானேஷ் குமார் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நிலையில், இவ்வருடம் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் அடுத்த வருடம் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களை நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையராக சென்ற வருடம் நியமிக்கப்பட்ட கியானேஷ் குமார் அதற்கு முன்பு மத்திய அரசில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கேரளா மாநில 1988ஆம் வருட ஐஏஎஸ் பிரிவை சேர்ந்த கியானேஷ் குமார் அமெரிக்காவில் உள்ள ஹார்ட்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர்.
கியானேஷ் குமார் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நிலையில், சுக்பீர் சிங் சாந்து அவரது இடத்தில் மூத்த தேர்தல் ஆணையராக பணியாற்ற உள்ளார். சாந்து இதுவரை இருந்த பொறுப்பில் ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலத்தின் தலைமைச் செயலராக பணியாற்றி வந்த விவேக் ஜோஷி மத்திய அரசிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கியானேஷ் குமார் சென்ற வருடம் மார்ச் 15 ஆம் தேதி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 2029 ஆம் வருடம் ஜனவரி 26 வரை, அதாவது அவருக்கு 65 வயது ஆகும் வரை, கியானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
1988 ஆம் வருடம் ஐஏஎஸ் பணியில் சேர்ந்த கியானேஷ் குமார், உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றியபோது ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்யும் மசோதா உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின்னர் அயோத்தி ராமர் ஆலய வழக்கு தொடர்பான பொறுப்புகளையும் உள்துறை அமைச்சகத்தில் மேற்பார்வை செய்து மத்திய அரசின் நம்பிக்கையை பெற்றவர்.
கான்பூரில் உள்ள ஐஐடியில் பொறியாளர் பட்டம் பெற்றவர் கேரளா அரசிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார். எர்ணாகுளம் திருவனந்தபுரம் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் பல்வேறு பொறுப்புகளில் கியானேஷ் குமார் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள விவேக் ஜோஷி 1989 ஆம் வருடம் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர். மத்திய அரசில் மூத்த அதிகாரிகள் நியமனங்கள் மற்றும் பணியிடை மாற்றங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் பணியில் இருந்தவர் விவேக் ஜோஷி. சென்ற வருடம் ஹரியானா மாநிலத்தில் புதிய அரசு பதவி ஏற்ற பிறகு விவேக் ஜோஷி தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். பொதுவாக பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படும் நிலையில், விவேக் ஜோஷி ஓய்வு பெறும் முன்னரே தேர்தல் ஆணையத்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.