brett lee - sooryavanshi X/PTI
கிரிக்கெட்

அவருக்கு 15 வயது தானா..?? எங்களுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது! சூர்யவன்ஷி வயது குறித்து பிரட் லீ!

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, வைபவ் சூர்யவன்ஷியின் வயது குறித்த சந்தேகங்கள் இந்தியாவிற்கு வெளியே இன்னும் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்..

Rishan Vengai

15 வயதிலேயே உலக கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் வைபவ் சூர்யவன்ஷி, ஐபிஎல் சாதனைகள், யு19 உலகக்கோப்பை வெற்றி, இந்திய அணியில் இளம் வயது அறிமுகம் என வரலாறு படைத்துள்ளார். ஆனால் அவரது உண்மையான வயது குறித்த சர்ச்சை தொடர, 15 வயதில் இத்தகைய சக்தி, பேட்டில் AI சிப் என வதந்திகளும் கிளம்பியுள்ளன. பிரெட் லீ அவருடைய வயது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

15 வயதில் உலக கிரிக்கெட்டையே மிரட்டிவருகிறார் குட்டி ராட்சசன் வைபவ் சூர்யவன்ஷி. 13 வயதில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டது முதலே, ’யார்ரா இந்த பையன்’ என்ற Mode-ல் தான் தற்போதுவரை பிரம்மிப்பை கொடுத்துவருகிறார் வைபவ்.

யூத் கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் 49 சதங்கள், 100 சிக்சர்கள், அதிவேக சதம் என பல்வேறு வரலாற்று சாதனைகளை குவித்த இளம்மேதை சூர்யவன்ஷியை பார்த்த பல ஜாம்பவான் கிரிக்கெட்டர்கள், ’This Guy is Unreal’ என்றே ஆச்சரியப்பட்டனர். அங்கிருந்து 14 வ்யதில் ஐபிஎல்லில் அறிமுகமான சூர்யவன்ஷி இளம்வயதில் டி20 சதமடித்த வீரராக வரலாறு படைத்தது முதல், 2026 ஐபிஎல்லில் ஒரே சீசனில் 776 ரன்கள் குவித்து தொடரின் மதிப்புமிக்க வீரர் விருது, சீசனின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் விருது, சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் ஆரஞ்சு தொப்பியையும் வென்று சாதனை படைத்தார். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல்லில் ஒரு சீசனில் 72 சிக்சர்களை விளாசிய அவர், அதிகபட்சமாக 59 சிக்சர்கள் அடித்திருந்த சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார்.

sooryavanshi

தொடர்ந்து யு19 உலகக்கோப்பையை வென்ற சூர்யவன்ஷி, இந்திய சீனியர் அணியில் 15 வயதில் அறிமுகமாகி பல்வேறு உலகசாதனைகளை உடைத்துவருகிறார்.

இப்படி ஆச்சரியத்தின் மறு உருவமாக சூர்யவன்ஷி இருந்தாலும், அவருடைய வயதைச்சுற்றிய சர்ச்சைகள் இன்னுமே சுற்றிக்கொண்டுதான் உள்ளன. முதலில் அவருக்கு 15 வயது இல்லை என்றும், அதிக வயதை குறைத்து சொல்லியிருக்கிறார் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது, தொடர்ந்து 15 வயது சிறுவனால் எப்படி இப்படி அபார சிக்சர்களை அடிக்கமுடியும், அவருடைய பேட்டில் AI சிப் இருப்பதாகவும் சர்ச்சை கிளம்பியது.

இந்தசூழலில் தான் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, சூர்யவன்ஷியின் வயது குறித்த சந்தேகங்கள் இன்னும் இந்தியாவிற்கு வெளியே இருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்திய உரையாடல் ஒன்றில் சூர்யவன்ஷி குறித்து பேசியிருக்கும் பிரட் லீ, “சூர்யவன்ஷி ஓர் அற்புதமான வீரர். இந்தியாவுக்கு வெளியே உள்ள அனைவரும் அவர் 15 வயதுடையவரா என்ற கேள்வியைத்தான் தற்போதும் எழுப்புகிறார்கள். அவருக்கு 15 வயதுதானா? என்பதுதான் உலகளவில் அதிகம் பேசப்படும் விஷயமாக இருக்கிறது.

வைபவ் சூர்யவன்ஷி

அவருக்கு என்ன வயது என்பது எனக்கு முக்கியமல்ல. அவருக்கு 15 வயது என்றால் அது மிகவும் சிறப்பான விசயம். ஒருவேளை 15 வயதாக இல்லாமல் 17 அல்லது 18 வயதாக இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை என்ன? இந்தச் சிறுவனால் சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும். இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு சிறந்த வரப்பிரசாதம் இவர். வருங்காலத்தில் இன்னும் பல பெரிய சாதனைகளை இவர் படைப்பார்”என பாராட்டி பேசியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தியிருக்கும் சூர்யவன்ஷி, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சேவாக்கை போல ஒரு அதிரடியான ஓப்பனாராக மாறும் லட்சியத்தோடு ரெட் பால் கிரிக்கெட்டில் தன்னுடைய கவனத்தை தற்போது திருப்பியுள்ளார்.