சூர்யவன்ஷி ‘ஃப்ளாட்-ட்ராக் புல்லி’யா..? அஜிங்கியா ரஹானே பளீச் பதில்!
சூர்யவன்ஷி மீது ‘பிளாட் டிராக் பல்லி’ என்ற விமர்சனம் எழுந்தாலும், ஜிம்பாப்வே தொடரில் இரண்டு அரைசதங்கள் அடித்து திறமையை நிரூபித்துள்ளார். அயர்லாந்து தொடரிலேயே அவரை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என முகமதுகைஃப் கருத்து தெரிவிக்க, ரஹானேவும் அழுத்தம் கொடுக்காமல், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் வித்தியாசத்தை உணரச் செய்து, அவரை இயல்பாக விளையாட விட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
கம்பீர் நிர்வாகத்தின் ஒற்றை முடிவு சூர்யவன்ஷி போன்ற ஒரு வீரர்மீது ‘இவர் பிளாட் டிராக் பல்லி’ என்ற விமர்சனத்தை பெற்றுத்தந்துள்ளது. அயர்லாந்து டி20 தொடரில் பெஞ்ச் செய்யப்பட்ட சூர்யவன்ஷி, நேரடியாக வேகம் மற்றும் பவுன்சுக்கு சாதகமான கடினமான இங்கிலாந்து மண்ணில் களமிறக்கப்பட்டார். அங்கு அவர் 3 டி20 போட்டிகளில் விளையாடி வெறும் 13, 15 மற்றும் 14 ரன்களை மட்டுமே அடித்தார். ஆர்ச்சருக்கு எதிரான வேகமான பவுன்சருக்கு அவரிடம் பதில் கிடைக்கவில்லை.
இந்தசூழலில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் 2 அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருந்தாலும், சூர்யவன்ஷி மீது விமர்சனங்கள் மட்டுமே வைக்கப்பட்டு வருகிறது. ஏன் இதே ஆட்டத்தை இங்கிலாந்தில் அடிக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் சூர்யவன்ஷியை அயர்லாந்து தொடரிலேயே அறிமுகம் செய்திருக்க வேண்டும் என்றும், அந்த இளம் மேதையை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய வீரர் முகமதுகைஃப் கூறியுள்ளார். இதே கருத்தை வைத்திருக்கும் அஜிங்கியா ரஹானே, சூர்யவன்ஷி மீது அழுத்தம் போடக்கூடாது என்றும், அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் தன்னுடைய சர்வேதச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஜிங்கியா ரஹானே, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உடனான யூடியூப் சேனல் உரையாடலில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது சூர்யவன்ஷி குறித்து பேசிய அவர், “தற்போது இதைப் பற்றிச் சொல்வதோ கருத்து தெரிவிப்பதோ கடினம். நான் எதுவும் சொல்லி அந்த இளம் வீரருக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. ஏனென்றால், மக்கள் ஏற்கனவே அவரைப் பற்றி நிறைய பேசுகிறார்கள். அவர் விளையாடியுள்ளது வெறும் இரண்டு ஐபிஎல் சீசன்கள்தான்.
நான் என்னுடைய கிரிக்கெட் அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் முற்றிலும் வேறுபட்டவை. உங்கள் நாட்டிற்காக விளையாடும்போது அழுத்தம் மிக அதிகம். ஒரு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஐபிஎல்-இல் 4, 5 ஓவர்களில் 70 ரன்களை சேஸ் செய்வது எளிது. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் உங்கள் நாட்டிற்காக விளையாடும்போது அதே அளவு ரன்களைத் துரத்துவது வேறு விஷயம். எனவே, அவரை அவரது ஆட்டத்தை விளையாட விடுங்கள், அவர் வளரட்டும்” என்று ரஹானே கூறினார்.

