லாரா, ரிச்சர்ட்ஸ் கட்டெழுப்பிய கோட்டை.. 3வது முறையாக உலகக்கோப்பை தகுதியை இழந்த WI!
லாரா, ரிச்சர்ட்ஸ், லாயிட், கெய்ல் என பல தலைமுறைகளாக உலக கிரிக்கெட்டில் ஆட்சிசெய்த வெஸ்ட் இண்டீஸ், 6 ஐசிசி கோப்பைகள், 2 உலக சாம்பியன் பட்டங்கள், தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பை இறுதிச் சுற்று என அசத்தலான சாதனைகள் படைத்தது. ஆனால் 2019, 2023, இப்போது 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கும் நேரடி தகுதியை இழந்து, தகுதிச்சுற்று வழியால் மட்டுமே உலகக்கோப்பை கனவை தொடர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
1975-ல் நடைபெற்ற உலகின் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை, அதைத்தொடர்ந்து 1979 ஒருநாள் உலகக்கோப்பை, 2012, 2016-ல் ஐசிசி டி20 உலகக் கோப்பை, 2004-ல் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை, ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான கோப்பை என இதுவரை 6 ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 3 உலகக் கோப்பை போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறி சாதனை படைத்த அணி, இரு முறை உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனைகளையும் படைத்துள்ளது.
80-களில் ‘விவிஐ ரிச்சர்ட்ஸ், கிளைவ் லாயிட், கோர்டன் க்ரீனிட்ஜ், ஜெஃப் டுஜான், ஆண்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் மைக்கேல் ஹோல்டிங்’ என ஆடும் 11 வீரர்களை கண்டாலே மற்ற உலக அணிகள் நடுங்கிப்போகும். அதைத்தொடர்ந்து 90-களில் ‘பிரையன் லாரா, கார்ல் ஹாப்பர், சந்தர்பால், இயன் பிஷப், கர்ட்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னி வால்ஷ்’போன்ற சாம்பியன் வீரர்கள் அந்த லெகஸியை அப்படியே கடத்திச்சென்றனர். 2000-களில் வந்த ‘கிறிஸ் கெய்ல், ராம்நரேஷ் சர்வான், ஃபிடல் எட்வர்ட்ஸ், டினோ பெஸ்ட், டேரன் சமி, ட்வைன் பிராவோ மற்றும் ரிக்கார்டோ பவல்’ போன்ற வீரர்கள் அந்த மரபை அப்படியே நீட்டிக்கச் செய்தனர்.
இப்படி உலக கிரிக்கெட்டில் பல தலைசிறந்த வீரர்களையும், சாதனைகளையும் படைத்த வெஸ்ட் இண்டீஸ் அணி தான், தற்போது தொடர்ச்சியாக 3வது உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாமல் வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
2019 ஒருநாள் உலகக்கோப்பையில் நேரடியாக தகுதிபெற தவறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 2023 உலகக்கோப்பையிலும் அதையே தொடர்ந்தது. இதில் சோகம் என்னவென்றால் 2023 தகுதிச்சுற்று போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வேவுடன் தோற்ற 2 முறை உலகசாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி, 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காமலேயே பரிதாபமாக வெளியேறியது.
இந்நிலையில் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான நேரடி தகுதியையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இழந்துள்ளது. 2027 உலகக்கோப்பையை நடத்தும் அணிகளான தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், மீதமருக்கும் 8 இடங்கள் தரவரிசைப் பட்டியல் மூலம் தீர்மானிக்கப்படும். இந்தசூழலில் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்கு சரிந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றதன் மூலம் நேரடி உலகக்கோப்பை தகுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிவருகின்றன. முதல் போட்டி மழையால் நடக்காத நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 2வது ஒருநாள் போட்டியில் வெற்றியை ருசித்தது. இந்த தொடரில் ஆப்கானிஸ்தானை அயர்லாந்து 5-0 என வீழ்த்துவது மட்டுமே வெஸ்ட் இண்டீஸுக்கான வாய்ப்பாக இருந்தது. தற்போது ஆப்கானிஸ்தான் வென்றிருக்கும் சூழலில், நடக்கவிருக்கும் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வென்றாலும் இனி வெஸ்ட் இண்டீஸுக்கு வாய்ப்பு முழுமையாக இல்லை. இதனால் அந்த அணி தகுதிசுற்று போட்டிகளில் விளையாடி மட்டுமே 2027 உலகக்கோப்பைக்கு தகுதிபெறும்.
2 முறை உலக சாம்பியனாக கொடிகட்டி பறந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இப்படி தொடர்ந்து 3வது முறையாக உலகக்கோப்பைக்கு நேரடி தகுதியை இழந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிடைய செய்துள்ளது.

