ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியது தொடர்பாக, பாலிவுட் நட்சத்திரமும் அணியின் நிர்வாகியுமான ஷாருக் கானை பாஜக விமர்சித்துள்ளது.
இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படும் ஐபிஎல் போட்டியின் 19வது சீசன், மார்ச் 26 தொடங்கி மே 31 வரை நடைபெற இருக்கிறது. இதற்கான மினி ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை வாங்கியது. இதற்காக, அந்த அணியின் நிர்வாகியான பாலிவுட் நட்சத்திரம் ஷாருக் கானை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சங்கீத் சிங் சோம் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒருபுறம், வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். மறுபுறம், ஐபிஎல் ஏலத்தில் கிரிக்கெட் வீரர்கள் வாங்கப்படுகிறார்கள். ஷாருக் கான் 9 கோடி ரூபாய் செலவழித்து ரஹ்மானை வாங்கியுள்ளார். இன்று, வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பிரதமரை அவமதிக்கிறார்கள். ஆனால் ஷாருக்கான் போன்ற துரோகிகள் 9 கோடி ரூபாய் செலவழித்து அவர்களுக்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை" என விமர்சித்தார். சங்கீத் சிங் சோமைத் தவிர, ஆன்மீகத் தலைவர் தேவ்கினந்தன் தாகூரும் கே.கே.ஆர் மற்றும் ஷாருக்கானை விமர்சித்துள்ளார். ஜகத்குரு சுவாமி ராம்பத்ராச்சாரியாரும் ஷாருக் கானை ஒரு துரோகி என்றும், வலுவான குணம் இல்லாத ஒருவர் என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சை அரசியலையும் விட்டுவைக்கவில்லை. இதுதொடர்பாக உத்தவ தாக்கரேவின் சிவசேனா தலைவர் ஆனந்த் துபே, "ஷாருக் கான் ரஹ்மானை தனது அணியில் இருந்து நீக்கினால், நாம் அனைவரும் அவரை மதிப்போம், கௌரவிப்போம், அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவோம். ஆனால் ஷாருக்கான் அவரை வைத்து பணம் சம்பாதித்தால், அந்தப் பணம் அங்கு பயங்கரவாதிகளை வளர்த்து, நம் நாட்டிற்கு எதிராக சதி செய்யப் பயன்படுத்தப்படும். இது எந்த விலையிலும் நடக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஷாருக் கானை ஆதரித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை 'துரோகி' என்று அழைப்பது இந்தியாவின் பன்முகத்தன்மையின் மீதான தாக்குதல். வெறுப்பு தேசியவாதத்தை வரையறுக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை விஷமாக்குவதை நிறுத்த வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார். மற்றொரு தலைவரான தாரிக் அன்வர், "கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தால், ஷாருக்கானால் வங்கதேசம் அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் வீரர்களை அழைத்து வர முடியும். உள்ளூர் கிரிக்கெட் வாரியத்தின் அனுமதி அவசியம்; அது இல்லாமல், அது நடக்காது. எனவே, முதலில், அத்தகைய வீரர்களை நம் நாட்டிற்குள் அனுமதிப்பதா, இல்லையா என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். இது ஒரு சர்வதேச நிகழ்வு என்பதால், சர்வதேச சட்டம் அங்கு பொருந்தும்” எனப் பதிலளித்துள்ளார்.
இமாம் சங்கத் தலைவர் மௌலானா சஜித் ரஷிதி, "இந்த நாட்டில், அரசியலமைப்பைப் பற்றி சிந்திக்காமல் அல்லது புரிந்துகொள்ளாமல் எதையும் குருட்டுத்தனமாக எதிர்ப்பது ஒரு பழக்கமாகிவிட்டது. ஒரு முஸ்லிம் பெயர் வரும்போதெல்லாம், எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் எளிதாகிவிடும். ஷாருக் கான் முஸ்லிம், அவர் ஏலம் எடுத்த வங்கதேச கிரிக்கெட் வீரரும் முஸ்லிம். எனவே இங்கு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உடனடியாக வெளிப்படுவதால் எதிர்ப்பு தவிர்க்க முடியாதது" என்றார்.
அகில இந்திய முஸ்லிம் ஜமாஅத்தின் தேசியத் தலைவர் மௌலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, "வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் குறித்து இந்திய முஸ்லிம்களும் கவலை கொண்டுள்ளனர் என்பதை தேவ்கினந்தன் தாக்கூர் மற்றும் சங்கீத் சோம் புரிந்துகொண்டு அவர்களுடன் ஒற்றுமையாக நின்று அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், ஷாருக் கான் அங்குள்ள ஒரு கிரிக்கெட் வீரருடன் ஏதேனும் ஒப்பந்தம் செய்தால், அது துரோகச் செயல் அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
AIMIM தேசிய செய்தித் தொடர்பாளர் வாரிஸ் பதான், “வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களை நான் கண்டிக்கிறேன். வன்முறை செய்யக்கூடாது. இந்தியாவில்கூட, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, யார் எதை ஆதரிக்கிறார்கள் என்பது எப்படி முக்கியம்? சில காலத்திற்கு முன்பு, இந்திய அரசாங்கம் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை அனுமதித்தது. எனது நாட்டின் பெருமையையும் கண்ணியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பணத்தை நான் நிராகரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பைர் கான், முஸ்தாபிசூரை அணியில் இருந்து நீக்குமாறு ஷாருக்கை வலியுறுத்தினார். அண்டை நாடான வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு தலைவர்கள் இரையாகினர். இதன் காரணமாக, அங்கு வன்முறை வெடித்ததில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.