வங்கதேசம்| மீண்டும் அதிர்ச்சி.. 2 வாரத்தில் 4ஆவது சம்பவம்.. இந்தியரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி!
இந்து தொழிலதிபர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொல்ல முயற்சி செய்ததால், வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, அதற்கான பணிகள் அங்கு வேகம் பிடித்துள்ளன. கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, டாக்காவில் தனது பிரசாரத்தைத் தொடங்கியபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார்.
இதில் தலையில் குண்டு காயமடைந்த ஹாடி, உள்ளூர் மருத்துவமனைக்குப் பிறகு சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 18ஆம் தேதி மரணமடைந்தார். அவருடைய மரணம், வங்கதேசத்தில் வன்முறைக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், டிசம்பர் 22ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது, மேலும் வங்கதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியது. இதனால், இன்றுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தின் ஷரியத்பூர் மாவட்டத்தில் இந்து தொழிலதிபர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோகன் சந்திர தாஸ் என்பவர், கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு, ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த கும்பல், கத்தியால் குத்தியதோடு, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். உயிருக்குப் பயந்து அருகில் இருந்த குளத்தில் குதித்து உயிர் தப்பிய அவர், தற்போது பலத்த தீக்காயங்களுடன் டாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக ரபி மற்றும் சோஹாக் ஆகிய இருவரை அடையாளம் கண்டுள்ள காவல் துறையினர், அவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முன்னதாக, ஹாடி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெடித்த வன்முறையின்போது இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் (29), என்ற இந்து இளைஞரை, அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அதேபோல், ஆடை தொழிற்சாலை ஒன்றில் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) என்ற இந்து தொழிலாளி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சமீபகாலமாக வங்கதேசத்தில் இந்தியர்கள் கடுமையாகத் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

