ஐஎம்டிபியின் 25 ஆண்டுகால பிரபல நடிகர்கள் பட்டியல்.. முதலிடத்தில் ஷாருக் கான்!
இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் ஷாருக் கான் என ஐஎம்டிபி அடையாளப்படுத்தியுள்ளது.
திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் பிரபலங்களின் உள்ளடக்கத்திற்கான உலகின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகாரப்பூர்வ இடமான ஐஎம்டிபி, கடந்த கால் நூற்றாண்டில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர்களை அடையாளம் காட்டியுள்ளது. அதன்படி, ’பாலிவுட்டின் பாட்ஷா’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் ஷாருக் கான், இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2000ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு ஆகஸ்ட் வரை, ஆண்டுவாரியாக பிரபலான 5 படங்களை ஆய்வு செய்து, ஐஎம்டிபிஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
’இந்திய சினிமாவின் 25 ஆண்டுகள்’ என்ற அறிக்கையின்படி, கடந்த 25 ஆண்டுகளில் பிரபலமான 130 படங்களில், இருபதில் ஷாருக் கான் நடித்துள்ளார். 2000 மற்றும் 2004க்கு இடையில், அவரது படங்கள் ஒவ்வோர் ஆண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த பிரபலமான நடிகர் பட்டியலில், அமிர் கான் மற்றும் ரித்திக் ரோஷன் ஆகியோர் தலா 11 படங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். தீபிகா படுகோனே 10 படங்களுடன் ஒட்டுமொத்தமாக மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
அதேநேரத்தில், ஷாருக் கான் நட்சத்திர அந்தஸ்தில் முன்னணியில் இருந்தாலும், சர்வதேச அளவில் அமிர் கானே உள்ளார். ஐஎம்டிபியின் கூற்றுப்படி, அவரது 2009ஆம் ஆண்டு கிளாசிக் ’3 இடியட்ஸ்’ உலகளவில் மிகவும் பிரபலமான இந்திய படமாக உள்ளது. அது, 4,68,000 பயனர் மதிப்பீடுகளையும் 8.4 மொத்த மதிப்பெண்ணையும் பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, ’3 இடியட்ஸ்’ இங்கிலாந்து, ஐரோப்பாவின் பெரும்பகுதி மற்றும் ஆஸ்திரேலியாவில் சிறந்த இந்தியத் திரைப்படமாகும்.
இதற்கிடையில், ’தங்கல்’ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது, அதேநேரத்தில், ’தாரே ஜமீன் பர்’ பிரேசிலில் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படமாகத் தொடர்கிறது. இருப்பினும், அமெரிக்காவில், எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். படம் எல்லாவற்றையும் விஞ்சி எல்லா காலத்திலும் மிகவும் பிரபலமான இந்தியத் திரைப்படமாக மாறியுள்ளது.