வங்கதேச கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஜஹானாரா ஆலம் கிரிக்கெட் அணி ஊழியர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்தார். மஞ்சுருல் இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் விசாரணைக் குழுவை நியமித்தது. ஆனால், விசாரணை அறிக்கை தாக்கல் தாமதமாகியதால், உயர்நீதிமன்றம் BCB-ஐ எச்சரித்தது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஹானாரா ஆலம், அவ்வணியின் முன்னாள் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் தன்னிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வங்கதேச கிரிக்கெட்டையே அதிர்ச்சிக்குள்ளாகிய இந்த குற்றச்சாட்டில், சம்பந்தமே இல்லாமல் தேர்வாளர் மஞ்சுருல் இஸ்லாம் தன் தோள்மீது கைவைத்து மாதவிடாய் குறித்து கேட்டதாகவும், தேர்வாளருக்கு எதற்கு இந்ததகவல் என்ற சந்தேகத்தில் பேசிய போது, அவர் மேலும் அதிகுறித்து சில கமண்டுகளை பாஸ் செய்தார். நான் அவரிடம் இருந்து நழுவி சென்றபிறகு, மஞ்சுருல் தன்னை கடுமையாக விமர்சிக்கவும், தனக்கு எதிராக நடந்துகொண்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும் இதுகுறித்து மகளிர் குழுத் தலைவரும், பிசிபி தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரியும் தனது புகார்களை வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
முன்னாள் கேப்டனின் குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்த நிலையில், புகாரை ஏற்றுக்கொண்ட வங்கதேச கிரிக்கெட் வாரியம் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்தது.
வங்கதேச கிரிக்கெட் வாரியம் விசாரணைக் குழுவை நியமித்தாலும் பல காரணங்களை கொண்டு விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதை தாமதித்து கொண்டே சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிசம்பர் 2ஆம் தேதி முதல் முறையாக கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்த பிசிபி, வீராங்கனை ஜஹானாரா எழுத்துப்பூர்வ புகாரை சமர்ப்பிக்க சிறிது நேரம் கேட்டதாகவும், அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறியது. பின்னர் டிசம்பர் 21ஆம் தேதி, பிசிபி மீண்டும் விசாரணைக் குழு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறியது.
இப்படி மீண்டும் மீண்டும் அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிப்போன நிலையில், வங்கதேச உயர்நீதிமன்றத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே விசாரணையை தாமதப்படுத்துவதாகவும், இதை சட்டவிரோத செயல்பாடு என அறிவிக்க வேண்டும் என்றும் புகார் மனு கொடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் வங்கதேச வாரியத்தை எச்சரித்த பிறகு, தற்போது வங்கதேச வாரியத்திடம் விசாரணைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.