Matt Renshaw cricbuzz
கிரிக்கெட்

190 ரன்கள்.. 24 ஆண்டுகளுக்கு பின்.. தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலியா வீரர் ரென்ஷா சாதனை!

தென்னாப்பிரிக்கா மண்ணில் 24 ஆண்டுகளுக்கு பிறகு அதிக ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரராக வரலாறு படைத்துள்ளார் மேட் ரென்ஷா.

Rishan Vengai

தென்னாப்பிரிக்கா மண்ணில் ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா 190 ரன்கள் அடித்து 24 ஆண்டுகளுக்கு பின் சாதனை படைத்தார். அவரது அபாரமான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்தது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா 124 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. வியான் முல்டர் மற்றும் மார்கோ யான்சன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

எப்படியும் ஆஸ்திரேலியா 200 ரன்னுக்குள் சுருண்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தனியாளாக போராடிய மேட் ரென்ஷா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். இறுதிவரை நிலைத்து நின்று ஆடி 190 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார் ரென்ஷா. அவருடைய அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 390 ரன்கள் குவித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்த சதத்தின் மூலம் தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிகபட்ச ரன்கள் அடித்த 4வது வீரராக மாறியுள்ளார் ரென்ஷா. கடைசியாக 2002ஆம் ஆண்டு ஆடம் கில்கிறிஸ் மட்டுமே 203 ரன்கள் அடித்திருந்த நிலையில், அவருக்கு பிறகு சாதனை பட்டியலில் இணைந்தார் மேட் ரென்ஷா. 

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 27 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.