இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இலங்கையின் காலி ஸ்டேடியத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில், இரண்டாவது நாளான இன்று 600 ரன்களை கடந்து ஆஸ்திரேலியா இலங்கையை துவம்சம் செய்துவருகிறது.
உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் என மூன்று ஆஸ்திரேலியா வீரர்கள் ஒரே டெஸ்ட் போட்டியில் சாதனைகளை குவித்துள்ளனர்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியாவிற்கு எதிராக சோபிக்காத ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இந்த போட்டிக்கு முன்புவரை அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரானது 195*ஆக இருந்துவந்த நிலையில், இலங்கைக்கு எதிராக தன்னுடைய முதல் இரட்டை சதத்தை எடுத்துவந்து சாதனை படைத்தார்.
352 பந்துகள் களத்தில் நின்ற அவர், 16 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 232 ரன்கள் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 அரைசதங்கள், 15 சதங்கள் அடித்திருக்கும் கவாஜா, முதல் இரட்டை சதத்தை விளாசினார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்திருக்கும் ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசி 141 ரன்கள் அடித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 35வது சதமாக பதிவுசெய்யப்பட்டது.
இதன்மூலம் 34 டெஸ்ட் சதங்கள் அடித்திருந்த சுனில் கவாஸ்கர், பிரையன் லாரா, யூனிஸ் கான், மஹிலா ஜெயவர்த்தனே முதலிய வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளார். அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ஜேக் காலிஸ், ரிக்கி பாண்டிங், குமார் சங்ககரா, ஜோ ரூட், ராகுல் டிராவிட்டுக்கு அடுத்தபடியாக 7வது வீரராக நீடிக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் நடப்பு டெஸ்ட் போட்டியில் 10,000 டெஸ்ட் ரன்கள் என்ற இமாலய மைல்கல் சாதனையை எட்டிய ஸ்டீவ் ஸ்மித், ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டர் மற்றும் ஸ்டீவ் வா முதலிய ஆஸ்திரேலியா சாம்பியன் வீரர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பாட் கம்மின்ஸ் தொடரில் இல்லாத நிலையில், ஆஸ்திரேலியா அணியை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துகிறார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 29 வயதான ஜோஸ் இங்கிலீஷ் ஆஸ்திரேலியா அணிக்காக தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலீஷ், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அதிரடியாக விளையாடி 90 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து முத்திரை பதித்துள்ளார் ஜோஸ் இங்கிலீஷ்.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் கடைசி செஸ்ஸனில் விளையாடிவரும் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 612* ரன்கள் குவித்து விளையாடிவருகிறது. களத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி மற்றும் வெப்ஸ்டர் இருவரும் விளையாடிவருகின்றனர்.
இலங்கை அணி சமீபத்தில் சிறந்தமுறையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவரும் நிலையில், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தடுமாறிவருகிறது.