பாகிஸ்தானில் உள்ள லாகூர் கடாஃபி மைதானத்தில் இன்று வாழ்வா-சாவா போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும், தோற்கும் அணி தொடரிலிருந்தே வெளியேறும் என்பதால் ஆட்டம் அதிகப்படியான எதிர்ப்பார்ப்புடன் தொடங்கியது.
பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி பேட்டிங்கை தேர்வுசெய்தார். மிகப்பெரிய கனவோடு பேட்டிங் செய்யவந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு, முதல் ஓவரிலேயே அதிரடி வீரர் குர்பாஸை 0 ரன்னில் வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார் ஆஸ்திரேலியா பவுலர் ஸ்பென்சர் ஜான்சன்.
அதற்குபிறகு கைக்கோர்த்த ஜத்ரான் மற்றும் செடிகுல்லா இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினார். ஆனால் கடந்த போட்டியில் சதமடித்து மிரட்டிய ஜத்ரானை 22 ரன்னில் வெளியேற்றினார் ஆடம் சாம்பா. உடன் ரஹ்மத் ஷாவும் 12 ரன்னில் வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி சறுக்கலை எதிர்கொண்டது.
கடினமான நேரத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா 6 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்டு 85 ரன்கள் அடித்து அசத்தினார். சதமடித்து அணியை மிகப்பெரிய டோட்டலுக்கு எடுத்துசெல்வார் என நினைத்தபோது, மீண்டும் வில்லனாக வந்த ஸ்பென்சர் ஜான்சன் செடிகுல்லாவின் விக்கெட்டை கழற்றி ஆஸ்திரேலியாவை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.
அதன்பின்னர் வந்த அனைத்து மிடில் ஆர்டர் வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, கடைசிவரை தனியொரு ஆளாக போராடிய அஸ்மதுல்லா ஓமர்சாய் 5 சிக்சர்களை பறக்கவிட்டு 67 ரன்களை குவிக்க, 50 ஓவரில் 273 ரன்கள் என்ற நல்ல டோட்டலை எட்டியது ஆப்கானிஸ்தான் அணி.
274 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ ஷார்ட் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி அதிரடியாக தொடங்கினாலும் 4வது மற்றும் 5வது ஓவரில் கேட்ச்சுக்கான வாய்ப்புகளை வழங்கியது. ஆனால் டிராவிஸ் ஹெட்டின் கேட்ச்சை ரசீத் கானும், மேத்யூ ஷார்ட்டின் கேட்ச்சை கரோட்டியும் கோட்டைவிட ஆப்கானிஸ்தான் அணி ரசிகர்களின் தலைமேல் இடியே இறங்கியது.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் கேட்ச்சை ஆப்கானிஸ்தான் கோட்டைவிட, அவர் இரட்டைசதம் விளாசி ஆப்கானிஸ்தான் அணியை தொடரிலிருந்தே வெளியேற்றினார்.,இந்தமுறை டிராவிஸ் ஹெட் என்ன செய்யப்போகிறாரோ என்ற பயம் போட்டியை பார்த்த ஒவ்வொரு ரசிகருக்கும் இருந்திருக்கும். அதற்கேற்றார்போல் டிராவிஸ் ஹெட்டும் 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு அரைசதமடித்து மிரட்டிவிட்டார். டிராவிஸ் ஹெட்டின் அதிரடியால் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றிலேயே முதல் 10 ஓவரில் 90 ரன்களை அடித்து சாதனை படைத்தது ஆஸ்திரேலியா.
போட்டியில் ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த 12.5 ஓவரில் 109 ரன்கள் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றபோதும் மைதானத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டதால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் தலா 1 புள்ளி என பிரித்து வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளை பெற்ற ஆஸ்திரேலியா அணி 3வது அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியது.
மழையின் உதவியால் தோல்வியிலிருந்து தப்பித்த ஆப்கானிஸ்தான் அணி 3 புள்ளிகளை பெற்று -0.990 (மைனஸ்) நெட் ரன்ரேட்டுடன் இன்னும் அரையிறுதிக்கான வாய்ப்பில் தொங்கிக்கொண்டிருக்கிறது.
நாளை நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினால் ஆப்கானிஸ்தான் அணி NRR அடிப்படையில் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை பெறும். அப்படி இல்லை என்றால் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த சூழலில் நாளை நடைபெறவிருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.