”மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டுமே நாங்கள் விளையாட வரவில்லை..” - கோபமடைந்த ஆப்கானிஸ்தான் கேப்டன்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைந்தபிறகு பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தசூழலில் ஆப்கானிஸ்தானுக்கு சென்று இருதரப்பு தொடர்களில் பங்கேற்று விளையாடுவதற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா பகிரங்கமாக மறுத்தது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அந்த முடிவை ரசீத்கான் வெளிப்படையாக விமர்சித்தார்.
ஆனால் ஆப்கானிஸ்தானுக்கு சென்றுதான் விளையாட மறுப்பே தவிர, ஐசிசி தொடர்களில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து ஆஸ்திரேலியா பங்கேற்று விளையாடும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கான சூழலை ஆஸ்திரேலியா எப்போதும் கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுஒருபுறம் இருக்க 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி, 2024 டி20 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்ற ஆஸ்திரேலியா என சில ரைவல்ரி போட்டிகளை ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடியுள்ளன.
இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு நாக்அவுட் போட்டியாக ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதவுள்ளன.
மேக்ஸ்வெல் ஒருவருக்காக விளையாடவில்லை..
மிகப்பெரிய மோதலுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதியிடம், மேக்ஸ்வெல் குறித்து கேட்கப்பட்டது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட ஆப்கானிஸ்தான் கேப்டன், மேக்ஸ்வெல்லுக்கு எதிராக மட்டும் நாங்கள் விளையாட வரவில்லை என காட்டமாக தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "நாங்கள் மேக்ஸ்வெல்லுடன் விளையாட மட்டுமே வந்திருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் முழு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிட்டுள்ளோம், 2023 உலகக் கோப்பையில் மேக்ஸ்வெல் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது வரலாற்றின் ஒரு பகுதியாகவே அமைந்தது. அதன் பிறகு, நாங்களும் அவர்களை டி20 உலகக் கோப்பையில் தோற்கடித்தோம்.
எங்களுடைய எதிரணிகளை எப்படி வீழ்த்தவேண்டும் என்றே சிந்திக்கிறோம், மாறாக தனிப்பட்ட வீரர்களுக்கு எதிராக திட்டமிட நாங்கள் மைதானத்திற்கு வரவில்லை. எங்களுடைய திட்டங்களை சரியாக களத்தில் செயல்படுத்தி வெல்ல முயற்சிப்போம். நாங்கள் மேக்ஸ்வெல்லை மட்டும் எதிர்த்து விளையாடவில்லை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே விளையாடுகிறோம்" என்று மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறினார்.
என்னதான் ஆப்கானிஸ்தான் அணி டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தாலும், இதுவரை அவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.