rohit sharma, mitchell starc x page
கிரிக்கெட்

ரோகித்திற்கு எதிராக 176.5 கி.மீ. வேகத்தில் பந்து வீசினாரா மிட்செல் ஸ்டார்க்? உண்மை என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வீசிய பந்து 176.5 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக வேக கண்காணிப்பு கருவி பதிவு செய்துள்ளது.

Prakash J

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், வீசிய பந்து 176.5 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக வேக கண்காணிப்பு கருவி பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இன்றைய போட்டியில் 3 முறை மழை குறுக்கிட்டதால் நேரக்குறைப்பு காரணமாக 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதையடுத்து, ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கிய முன்னாள் கேப்டன்களும், மூத்த வீரர்களுமான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்தப் போட்டியில் ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் கில்லும் ஏமாற்றினார். எனினும், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்கள் முடிவில் 136/9 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 21.1 ஓவரில் 131/3 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவுசெய்தது. தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடரில் சமநிலை பெற அந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்கிடையே, இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்தார். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவுக்கு எதிராக ஸ்டார்க் வீசிய பந்து 176.5 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக வேக கண்காணிப்பு கருவி பதிவு செய்துள்ளது. பொதுவாக ஸ்டார்க் 140 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுபவர். ஆனால் இம்முறை அவரின் அதிவேக பந்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ரோஹித் சர்மா பந்தை சரியாக எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதேவேளையில், சில நிபுணர்கள் பந்தின் வேகம் குறித்த பதிவில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

உண்மையில் 176.5 கிலோமீட்டர் வேகம் எட்டியதா அல்லது கருவி பிழை காரணமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. இருந்தாலும், ஸ்டார்க் தனது அதிவேக பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக, சர்வதேச கிரிக்கெட்டில் வேகமான பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஷோயிப் அக்தர் படைத்துள்ளார். 2003ஆம் ஆண்டு ODI உலகக் கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து வீரர் நிக் நைட்டுக்கு எதிராக மணிக்கு 161.3 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசியுள்ளார். ஸ்டார்க் வீசிய பந்து 176.5 கிலோமீட்டர் உண்மையிலேயே சாதனையாகக் கருதப்பட்டால், அது ஷோயிப் அக்தரின் 22 ஆண்டுகால சாதனையைத் தகர்த்ததாகக் கருதப்படும்.