அஸ்வின் - ஹேமங் பதானி ashwin
கிரிக்கெட்

“நம்ம ஊரு ஆளு பேசிட்டு போகட்டுமே; பேசினா என்ன” - ஹேமங் பதானிக்கு அஸ்வின் ஆதரவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்கை ஹேமங் பதானி விமர்சித்ததற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பேசினா என்ன நம்ம ஊரு ஆளு பேசிட்டு போகட்டுமே என அஸ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

ஐபிஎல்லில் இந்திய பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்ற ஹேமங் பதானியின் கருத்துக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார். ஃபிளெமிங்கை விமர்சித்ததற்காக பதானி கடுமையாக சாடப்பட்டாலும், கிரிக்கெட்டில் தவறுகள் இயல்பானவை, அவர் ஐபிஎல்லுக்கு புதியவர் என்பதால் இவ்வளவு கடுமையாக விமர்சிக்க வேண்டாம் என அஸ்வின் வலியுறுத்தினார்.

கடந்த ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனிலும் முதல் 3 போட்டிகளில் தோற்று படுமோசமாகவே தொடங்கியது. இந்தசூழலில் சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் குறித்து ஹேமங் பதானி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது.

பதானி - ஃபிளெமிங்

அந்த வீடியோவில், ஸ்டீபன் ஃபிளெமிங் நல்ல கோச் இல்லை என்றும், தோனியால் மட்டுமே ஐபிஎல்லில் அவர் கோப்பை வென்றுள்ளார், ஐபிஎல்லைத் தவிர வேறு எந்த லீக்கிலும் ஃபிளெமிங் கோப்பை வெல்லவில்லை என்றும் விமர்சிந்திருந்தார். மேலும் ஐபிஎல் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் கோச் வந்தால் தான் இந்திய வீரர்களிடமிருந்து வேலை வாங்க முடியும் என்றும், இந்திய ஆடுகளங்களின் தன்மையை புரிந்துகொண்டு செயல்பட முடியும் என்றும் பேசியிருந்தார்.

இதற்கு பிறகு கடந்த சில போட்டிகளாக ஹேமங் பதானி தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, 264 ரன்கள் அடித்தும் தோல்வி, 75 ரன்னுக்கு சுருண்டு தோல்வி என படுமோசமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் ஃபிளெமிங் குறித்து பேசியதற்கு முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஹேமங் பதானியை விமர்சித்திருந்தார்.

ஹேமங் பதானி குறித்து பேசிய சீக்கா, “ஸ்டீபன் பிளெம்கிங்கை குத்தம் சொன்னீங்க, இப்போ உங்க நிலைமை என்ன. ஹேமங் முதல்ல உங்கள பாருங்க, அதற்கு அப்புறம் மத்தவங்கள பார்க்கலாம். இதற்காக தான் எப்போதும் வாயை விடக்கூடாதுனு சொல்றது, அப்போது அவர் வாயை விட்டார், இப்போது என்ன பண்ண முடியும், வாயை மூடிக்கொண்டு தான் இருக்க முடியும்“ என்று விமர்சித்திருந்தார்.

இந்தசூழலில் தான் ரவிச்சந்திரன் அஸ்வின் ஹேமங் பதானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “சில நாட்களுக்கு முன்பு ஒரு வெளிநாட்டு கிரிக்கெட்டர் என் வார்த்தையை குறித்து கொள்ளுங்கள் அடுத்த சீசன் KKR அணிக்கு பிரெண்டன் மெக்கல்லம் கோச்சாக மாறுவார் என ட்வீட் செய்திருந்தார். ஆனால் இதுவரை யாருமே சௌரவ் கங்குலி மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கு கோச்சாக போறார் அல்லது ராகுல் டிராவிட் இங்கிலாந்து அணியின் ஹெட் கோச்சாக போறார்னு ஒரு தடவை கூட சொன்னது இல்ல. தற்போது உலக கிரிக்கெட்டின் முன்னணியில் இந்திய கிரிக்கெட் தான் கொடிநாட்டியுள்ளது, ஆனால் தரம் வாய்ந்த இந்தியப் பயிற்சியாளர்கள் இங்கு எங்கே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?” என காட்டமாக பேசினார்.

ஐபிஎல்லுக்கு இந்திய பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என கூறிய ஹேமங் பதானிக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்த அஸ்வின், “ஹேமங் பதானிக்கு இப்போது சில விசயங்கள் தவறாக செல்கிறது, கிரிக்கெட் என்பதே தவறுகள் அதிகமாக நடக்கும் இடம்தான். ஷேன் வார்னே கூட என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் 33% சதவீதம் தான் சக்சஸ்ஃபுல்லாக இருந்தேன் என்று கூறியுள்ளார். நாம் எல்லோருமே மிஸ்டேக் செய்யக்கூடியவர்கள் தான். அதுமட்டுமில்லாமல் ஹேமங் பதானி ஐபிஎல்லுக்கு புதியவர், கொஞ்சம் கடுமையாக நடந்துகொள்வதை தவிர்க்கலாம்.

தற்போது பதானி ஏன் விமர்சிக்கப்படுகிறார் என்பது எனக்கு புரிகிறது, ஆனால் நம்ம ஊரு ஆளு பேசிட்டு போகட்டுமே, பேசினா இப்போ என்ன” என ஆதரவாக பேசியுள்ளார்.