2025 மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை தோற்கடித்து அசத்தியது ஆஸ்திரேலியா மகளிர் அணி..
8 அணிகள் பங்கேற்றுள்ள 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை மற்றும் இந்தியாவில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பரபரப்பாக நடந்துவரும் உலகக்கோப்பை தொடர் நாக் அவுட் போட்டிகளை எட்டியுள்ளது. லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. கடைசி இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின..
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இரண்டு அணிகளும் தோல்வியே இல்லாமல் இருந்துவந்ததால், எந்த அணி முதல் தோல்வியை தழுவ போகிறது என்ற கேள்வியுடன் போட்டி தொடங்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 50 ஓவரில் 244 ரன்கள் மட்டுமே அடித்தது..
245 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி 24 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சதர்லேண்ட் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இருவரும் அதிரடியாக பேட்டிங்கை வெளிப்படுத்தி 41 வது ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
16 பவுண்டரிகளை விரட்டிய ஆஷ்லே கார்ட்னர் 69 பந்தில் சதம் விளாசி, உலகக்கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.. பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 98* ரன்களும் அடித்து அசத்திய சதர்லேண்ட் பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை தட்டிச்சென்றார்..
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தோல்வியே தழுவாத ஒரே அணியாக நீடிக்கிறது..