Andy Pycroft, indvpak afp, pti
கிரிக்கெட்

ஆசியக் கோப்பை | நடுவரை நீக்கக் கோரி பாகி. அளித்த புகார்.. மாற்று ஆக்‌ஷன் எடுத்த ICC!

நடுவர் பதவியிலிருந்து ஆண்டி பைகிராஃப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்த நிலையில், அவருக்குப் பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Prakash J

நடுவர் பதவியிலிருந்து ஆண்டி பைகிராஃப்ட்டை நீக்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்த நிலையில், அவருக்குப் பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய அணி வெற்றி பெற்றபோதும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

முன்னதாக, டாஸ் போட்டபோதும் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் புகாரைப் பதிவு செய்தது.

மேலும், ”இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைக்ராஃப்ட்டை (ஜிம்பாப்வே) பாகிஸ்தான் அணியுடன் நடைபெறும் எல்லாப் போட்டிகளிலிருந்தும் நீக்க வேண்டும்” என ஐசிசியிடமும் பாகிஸ்தான் புகார் அளித்தது. ஆனால் இப்புகாரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்துவிட்டது. அதேநேரத்தில், ஐசிசி மற்றும் பிசிபி இடையே ஏற்பட்ட சமரசத்திற்குப் பிறகு போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்டுக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் பாகிஸ்தான் போட்டிகளில் நியமிக்கப்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) நபர் ஒருவர் இந்திய செய்தி நிறுவனங்களுக்கு (பிடிஐ மற்றும் ஏஎன்ஐ) உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆண்டி பைக்ராஃப்ட்

அதன்படி, ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ரிச்சி ரிச்சர்ட்சன் தற்போது UAE-க்கு எதிரான இன்றைய பாகிஸ்தான் போட்டியில் நடுவராகக் களமிறக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் தொடரிலிருந்தே விலகுவது குறித்து பாகிஸ்தான் பரிசீலிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஒருவேளை, பாகிஸ்தான் தொடரில் இருந்து விலக முடிவு செய்திருந்தால், இந்த நடவடிக்கை அந்நாட்டு வாரியத்திற்கு 16 மில்லியன் அமெரிக்க டாலர் அளவு இழப்பை ஏற்படுத்தியிருக்கும் என்று கூறப்படுகிறது.