ஆசியக் கோப்பை | கைகுலுக்காத விவகாரம்.. ACCயிடம் புகார் அளித்த PAK... மவுனம் கலைத்த IND!
இந்திய அணி பாகிஸ்தானிடம் கைகுலுக்காததைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவ்வணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
பாகி. வீரர்களுக்கு கைகுலுக்காத சர்ச்சை
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், இந்திய அணி வெற்றி பெற்றபோதும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன.
அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர். முன்னதாக, டாஸ் போட்டபோதும் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வெளியிட்ட அறிக்கையில், ’டாஸின்போது கேப்டன் சல்மானை சூர்யகுமாருடன் கைகுலுக்க வேண்டாம்’ என்று போட்டி நடுவர் கேட்டுக் கொண்டதாகவும், ’இந்தியாவின் இந்த முடிவு விளையாட்டுக்கு ஒவ்வாதது' என்றும் PCB எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தவிர, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிலும் பாகிஸ்தான் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்திய அணியின் இந்தச் செயல்பாட்டை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்திய அணி மீது ஒழுங்கு நடவடிக்கை?
இந்த நிலையில், இந்திய அணி பாகிஸ்தானிடம் கைகுலுக்காததைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அவ்வணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தொடர்புடைய வீடியோக்களையும் மதிப்பாய்வு செய்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை ஒன்று கூறுகிறது. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. அதேநேரத்தில், இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ ) மவுனம் கலைத்துள்ளது.
மவுனம் கலைத்த பிசிசிஐ..விதிகள் சொல்வது என்ன?
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத மூத்த BCCI அதிகாரி ஒருவர், PTI-யிடம், ”விதிப் புத்தகத்தில் கைகுலுக்கல்கள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது, நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதன் பொருள், பாகிஸ்தானுடன் உறவுகள் மோசமடைந்துள்ளதால், இந்தியாவை அதை நீட்டிக்க கட்டாயப்படுத்த முடியாது என்பது தெளிவாகிறது.
ஐசிசியின் டி20 போட்டி நிபந்தனைகளின்படி, போட்டியின் முடிவில் எதிரணியை வாழ்த்தி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க அணிகளை வலியுறுத்துகிறது. இருப்பினும், இந்த வார்த்தைகள் வெளிப்படையாக கைகுலுக்கலை கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரிவிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், 2025 ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி, இன்னும் பாகிஸ்தானுடன் இரண்டு முறை மோத இருக்கும்பட்சத்தில், அப்போதும் இந்தியா கைகுலுக்காத நிலைப்பாட்டைச் செயல்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது ஏன்?
பாகிஸ்தான் வீரர்களுடனான அனைத்து நட்புறவுகளையும் புறக்கணிப்பது என்ற இந்திய அணியின் முடிவு, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் அரங்கில் ஒரு பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கலைத் தவிர்த்தது. முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
உலகையே அச்சுறுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, இரு நாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய - பாகிஸ்தான் இருநாட்டு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. ஐசிசி நடத்தும் தொடர்கள், அதுவும் 3வது நாட்டில் மட்டும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இங்கிலாந்தில் நடைபெற்ற லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இது, இந்திய அரசியலிலும் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இவைகளுக்கு மத்தியில்தான் கடந்த 14ஆம் தேதி போட்டி நடைபெற்றது.