ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, தன்னுடைய 81வது சர்வதேச சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
ஆனால், அதற்கு அடுத்த 4 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் வெளியேறிய அவர், தன்னுடைய ஃபார்மை தொடர் முழுவதும் எடுத்துச்செல்ல முடியாமல் தடுமாறினார். அவருடைய மோசமான ஃபார்மும் இந்திய அணி 10 வருடங்களுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரில் தோல்வியை தழுவ முக்கிய காரணமாக இருந்தது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கு பிறகு தோல்வி என இந்திய அணியின் தொடர் சறுக்கலுக்கு பிறகு பிசிசிஐ ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்தது.
அதன்படி, இந்திய அணியின் வருடாந்திர ஒப்பந்தத்தில் இருக்கும் மூத்த வீரர்கள் உட்பட அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாட வேண்டும் என கட்டாய விதிமுறையை வலியுறுத்தியது.
அந்த உத்தரவை தொடர்ந்து ரஞ்சிப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் பங்கேற்றனர். ஆனால் விளையாடிய ரஞ்சி போட்டியில் அவர்கள் விரைவாகவே வெளியேறியது பல்வேறு விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
81 சர்வதேச சதங்கள் அடித்த விராட் கோலிக்கு எப்படி மீண்டுவர வேண்டும் என்பது தெரியும் என்று பேசியிருக்கும் ராயுடு, அவருக்கு ரஞ்சி போட்டியெல்லாம் தேவையில்லை என கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. 81 சர்வதேச சதங்களுக்கும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனிமேலும் அது நன்றாகவே இருக்கும். அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு சிறிது நேரம் தேவை. அவருக்குள் இருக்கும் நெருப்பு தானாகவே எரியும். அவருக்கும் கொஞ்சம் மரியாதை அளியுங்கள், அவரை நம்புங்கள். மிக முக்கியமாக அவரை தனியாக இருக்க விடுங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.