அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2-ம் தேதி அகமதாபாத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10-ம் தேதி டெல்லி மைதானத்திலும் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரவீந்திர ஜடேஜா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ள அணியில் கருண் நாயர் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாறாக என்.ஜெகதீசன் மற்றும் தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2024 முதல்தர கிரிக்கெட்டில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கருண் நாயர், ஒரே ஆண்டில் மொத்தமாக 9 முதல்தர சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடித்து ரஞ்சி டிராபியில் 55.2 சராசரியுடன் 828 ரன்களும், விஜய் ஹசாரே டிராபியில் 389.5 சராசரியுடன் 779 ரன்களும் குவித்து அசத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஐபிஎல்லில் தன்னுடைய ஃபார்மை நிரூபித்த கருண் நாயர், 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுத்தார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய கருண் நாயர் இரட்டை சதமடித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இதே ஃபார்மோடு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் கருண் நாயர் அசத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்து ஏமாற்றினார். தொடரை வெல்லவேண்டிய இடத்தில் இருந்த இந்திய அணி பேட்ஸ்மேன்களில் சிறுசிறு தவறுகளால் தொடரை சமன்செய்ய மட்டுமே முடிந்தது. 25 சராசரியுடன் 205 ரன்கள் மட்டுமே கருண் நாயரால் அடிக்க முடிந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து தொடரில் ஒரு மோசமான ஃபார்மை வெளிப்படுத்தியதற்கு பிறகு சொந்த மண்ணில் நடக்கவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலிருந்து கருண் நாயர் நீக்கப்பட்டுள்ளார்.
அவருடைய நீக்கம் குறித்து பேசியிருக்கும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ”வெளிப்படையாகச் சொன்னால், கருண் நாயரிடமிருந்து நாங்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம். அவர் இங்கிலாந்து தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், ஆனால் நாம் அரைசதமடித்த ஒரு இன்னிங்ஸைப் பற்றி மட்டுமே பேசினோம். அது அப்படித்தான் முடிந்தது. இந்த கட்டத்தில் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் தேவை என்பதை உணர்கிறோம். அதனால் அந்த பணியை படிக்கல் வழங்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது, அவர் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக நல்ல ரன்களை பெற்றுள்ளார். இருக்கும் அனைவருக்கும் 15 அல்லது 20 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புகளை வழங்கினால் நல்லது என்று தான் நாங்களும் விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, அது அப்படி நடக்காது” என்று அஜித் அகர்கர் பேசியுள்ளார்.