’இந்திய கிரிக்கெட்டின் தரமான கம்பேக் ஸ்டோரி..’ இங்கிலாந்து மண்ணில் இரட்டை சதம் அடித்த கருண் நாயர்!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை அறிவித்துள்ளது தேர்வுக்குழு.
இந்த சூழலில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்தியா ஏ அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
இங்கிலாந்து லயன்ஸ் vs இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்..
கேன்டர்பரியில் உள்ள செயிண்ட் லாரன்ஸ் மைதானத்தில் தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சர்பராஸ் கான், துருவ் ஜுரல் இருவரும் 92 மற்றும் 94 ரன்கள் அடித்து வெளியேறினர். மறுமுனையில் 26 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் நிலைத்துநின்று ஆடிய கருண் நாயர் 204 ரன்கள் குவித்து அசத்தினார்.
கருண் நாயரின் அபாரமான இரட்டை சதத்தின் உதவியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 533 ரன்கள் குவித்து விளையாடிவருகிறது இந்தியா ஏ அணி.
Dear Cricket, Give Me One More Chance..
2016-ம் ஆண்டு இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றார் கருண் நாயர். இரண்டு அணிக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய அற்புதமான திறமையை வெளிப்படுத்திய கருண் நாயர், 33 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் உடன் 303* ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கருண் நாயரின் முச்சதத்தின் உதவியால் 759/7 ரன்கள் குவித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தது.
ஆனால் அதற்குபிறகு தன்னுடைய ஃபார்மை நிரூபிக்க முடியாத கருண் நாயர், 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஹோம் டெஸ்ட் தொடருக்கு பிறகு அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அவரால் இந்திய அணியில் கம்பேக் கொடுக்கவே முடியவில்லை.
இந்த சூழலில் கடந்த 2022-ம் ஆண்டு தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்ட கருண் நாயர், ’Dear Cricket, Give Me One More Chance’ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் 2024-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டின் அனைத்து வடிவத்திலும் ரன்களை மலைபோல் குவித்த கருண் நாயர், மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். ஒரே ஆண்டில் மொத்தமாக 9 முதல்தர சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் அடித்த அவர், ரஞ்சி டிராபியில் 55.2 சராசரியுடன் 828 ரன்களும், விஜய் ஹசாரே டிராபியில் 389.5 சராசரியுடன் 779 ரன்களும் குவித்து அசத்தினார்.
தொடர்ந்து கடினமான உழைப்பை போட்ட கருண் நாயர் ஐபிஎல்லில் கம்பேக் கொடுத்த கையோடு, இந்திய அணிக்கும் திரும்பியுள்ளார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஒரு அங்கமாக இருக்கும் அவர், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்ததன் மூலம் தரமான கம்பேக்கை பதிவுசெய்துள்ளார்.
விராட் கோலி ஓய்வுக்கு பிறகு அவருக்கான இடத்தில் கருண் நாயர் விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.