ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா cricinfo
கிரிக்கெட்

AFG vs AUS| கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அஸ்மதுல்லா.. 273 ரன்கள் சேர்த்த ஆப்கான்.. வெல்லுமா ஆஸி?

2024 சாம்பியன்ஸ் டிராபியின் வாழ்வா சாவா போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிவருகின்றன.

Rishan Vengai

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ, பி என பிரித்து நடத்தப்பட்ட போட்டிகளில் “இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து” என 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இருந்து பாகிஸ்தான், வங்கதேசம் முதலிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

afg vs aus

குரூப் பி பிரிவில் இருந்து இங்கிலாந்து அணி மட்டும் வெளியேறியிருக்கும் நிலையில், 2 அரையிறுதி இடங்களுக்கு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது.

இந்த சூழலில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிவருகின்றன. இந்தபோட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும் என்பதால் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

273 ரன்கள் அடித்த ஆப்கானிஸ்தான்..

லாகூரில் தொடங்கிய முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதி பேட்டிங்கை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிரடி வீரர் குர்பாஸை 0 ரன்னில் வெளியேற்றிய ஜான்சன் அதிர்ச்சி கொடுத்தார்.

முதல் விக்கெட்டை விரைவாகவே இழந்தாலும் அடுத்த விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஜத்ரான் மற்றும் செடிகுல்லா அடல் இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினார். ஆனால் கடந்த போட்டியில் சதமடித்த ஜத்ரான் 22 ரன்னில் ஜாம்பாவிடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

செடிகுல்லா அடல்

அதற்குபிறகு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செடிகுல்லா 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசி 85 ரன்கள் அடித்து அசத்தினார். சதமடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில் அவரும் தவறான நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற, அடுத்தடுத்து வந்த மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து விக்கெட்டுகளாக விழ மறுமுனையில் தனியாளாக போராடிய அஸ்மதுல்லா ஓமர்சாய் 5 சிக்சர்கள் 1 பவுண்டரி என பறக்கவிட்டு 67 ரன்கள் அடிக்க, 50 ஓவர் முடிவில் 273 ரன்களை சேர்த்தது ஆப்கானிஸ்தான் அணி.

அஸ்மதுல்லா ஓமர்சாய்

ஆப்கானிஸ்தானின் சிறந்த சுழற்பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக ஆஸ்திரேலியா 274 ரன்களை சேஸ் செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.