இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஃபார்மில் இருந்தால், ஆஸ்திரேலிய பவுலர் ஹசல்வுட் அவரை எதிர்கொள்ள முடியாது என முன்னாள் இந்திய வீரர் அபிஷேக் நாயர் கூறியுள்ளார். ஹசல்வுட், ஒருநாள் தொடரில் இந்திய வீரர்களை திணறடித்த நிலையில், டி20 தொடரில் அபிஷேக் சர்மாவின் தாக்கம் அவரை காலியாக்கும் என நம்பிக்கை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என இழந்தபிறகு, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெல்லும் எண்ணத்தில் களம்காண்கிறது இந்திய அணி..
டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் 3 மாதங்கள் இடைவெளி மட்டுமே இருப்பதால் நம்பர் 1 அணியான இந்தியாவும், நம்பர் 2 அணியான ஆஸ்திரேலியாவும் இதை சாதகமாக மாற்றுவார்கள்..
நாளை கான்பெரா மைதானத்தில் நடக்கவிருக்கும் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு தொடங்குகிறது.
ஒருநாள் தொடரில் சிறந்த ஃபார்மில் பந்துவீசிய ஹசல்வுட், இந்திய அணியின் மூத்தவீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரையும் திணறடித்தார். இந்தசூழலில் டி20 தொடரிலும் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கணிக்கப்படும் நிலையில், தொடக்க வீரரான அபிஷேக் சர்மா ஃபார்மில் இருந்தால் ஹசல்வுட் காலியாகிவிடுவார் என முன்னாள் இந்திய வீரரும், முன்னாள் துணை பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் பேசியுள்ளார்..
இருவருடைய மோதல்குறித்து பேசியிருக்கும் அபிஷேக் நாயர், “அபிஷேக் சர்மா ஃபார்மில் இருந்தால், ஹசில்வுட் ஃபார்மில் இல்லாமல் இருப்பார். அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்த்தால், முதல் பந்திலேயே பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிப்பார் என்பது போல் பேட்டிங் செய்கிறார். பவர்பிளேயில் அவர் விதைக்கும் பயம் இன்னிங்ஸ் முழுவதும் எதிரணிக்கு தொடர்கிறது. அந்த தாக்கத்தைத்தான் அபிஷேக் சர்மா தன்னுடைய ஆட்டத்தால் எடுத்துவருகிறார்.. அவர் ஆறு ஓவர்கள் பேட்டிங் செய்தால், இந்தியா 60 முதல் 80 ரன்கள் வரை எடுக்கும்” என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசினார்.
மேலும், ஹசல்வுட்டுக்கு எதிராக விளையாடுவது அபிஷேக்கிற்கு சவாலானதாக இருக்கும், ஏனென்றால் அவர் நல்ல லெந்த் மற்றும் பவுன்சர் மூலம் வீரர்களை பீட் செய்கிறார்.. இருப்பினும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐபிஎல்லில் விளையாடிய அனுபவத்தின் மூலம் அபிஷேக் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பேசியுள்ளார்..