ind vs pak web
கிரிக்கெட்

’இந்திய வீரர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்.. இது அநியாயம்!’ - பாக். வீரர் விமர்சனம்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான WCL போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட மறுத்ததால் போட்டி ரத்துசெய்யப்பட்டது. இது இந்திய வீரர்களின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

அரசியல் நெருக்கடி காரணங்களால் இந்திய அணி, அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் விளையாடுவதில்லை. அதேநேரத்தில், ஐசிசி தொடர்களில் பொதுவான நாட்டில் நடைபெறும் மைதானங்களில் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளிடையே உறவு மேலும் விரிசலடைந்துள்ளது. இதன் காரணமாக, தற்போது நடைபெற்று வரும் 2ஆவது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் கூட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தப்போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்து முதலில் ஷிகர் தவான் அறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுப் பதான் முதலிய வீரர்களும் மறுப்பு தெரிவித்தனர். இதற்குபிறகு போட்டி ரத்துசெய்யப்படுவதாக WCL தரப்பு அறிக்கை வெளியிட்டது.

ஆனால் இந்த தொடர் முடிவுசெய்து பல மாதங்கள் ஆனபோதும், தொடர் தொடங்குவதற்கான ஒரு வாரத்தின் போது ஃபோட்டோ ஷுட்டின் போதும் அமைதியாக இருந்த இந்திய வீரர்கள் ஏன் போட்டி நாளன்று இந்த முடிவை வெளியிட்டனர், குறைந்தபட்சம் தொடர் தொடங்கி முதல் போட்டி நடந்த நாளன்றாவது இந்திய வீரர்கள் இந்த முடிவை அறிவித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு போட்டி நடைபெறவிருந்த நாளன்று இப்படி ஒரு முடிவை எடுத்தது பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் முன்னாள் பாகிஸ்தான் பவுலர் அப்துர் ராஃப் கான் இந்திய வீரர்கள் இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்துள்ளார்.

இரண்டு பக்கத்தை ஏன் காட்டுகிறீர்கள்..

இந்திய வீரர்களை விமர்சித்த முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துர் ராஃப் கான், “வெளியே நீங்கள் ஒருவருக்கு ஒருவரை எதிர்கொண்டு விளையாட மாட்டோம் என்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள், ஆனால் திரைக்கு பின்னால் ஒன்றாக வெளியே செல்கிறீர்கள், ஒன்றாக ஷாப்பிங் செய்கிறீர்கள், ஒன்றாக சாப்பிடுகிறீகள், ஒரே அறையில் தங்கவும் செய்கிறீர்கள். பிறகு ஏன் போட்டியில் விளையாடும்போது மட்டும் பொதுமக்களுக்கு இப்படி ஒரு பக்கத்தை சித்தரிக்கிறார்கள்? இது அநியாயம்.

abdur rauf

பாகிஸ்தான் வீரர்கள் மட்டுமல்ல பல இந்திய வீரர்களும் கூட இதை உணர்கிறார்கள். நாங்கள் மைதானத்திற்கு வெளியே நண்பர்கள். பின்னர் பொதுமக்களுக்கு இவ்வளவு கடினமான பிளவை சித்தரிப்பது, 'நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாட மாட்டோம்' என்ற தோற்றத்தை உருவாக்குவது, தேவையற்ற பரபரப்பை உருவாக்குகிறது.

திரைக்குப் பின்னால், யதார்த்தம் மிகவும் வித்தியாசமானது. போட்டியை பார்க்க மிகுந்த உற்சாகத்துடனும் உணர்ச்சியுடனும் வரும் ரசிகர்கள் ஏமாற்றமடைகிறார்கள். இது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல. நாம் விளையாட்டுக்கும் அதன் ரசிகர்களுக்கும் கடமைப்பட்டுள்ளோம்" என்று ராஃப் கூறினார்.

ind vs pak

மேலும் அரசியலை விளையாட்டியிலிருந்து தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்த அவர், “எனது நிலையான பார்வை என்னவென்றால் அரசியலையும் கிரிக்கெட்டையும் தனித்தனியாக வையுங்கள். ஒரு வருடம் அல்லது இரண்டு வருட பதற்றம் கிரிக்கெட்டை நிறுத்தக்கூடும், ஆனால் உறவுகள் இயல்பு நிலைக்கு வந்தவுடன், போட்டிகள் எப்படியும் மீண்டும் தொடங்கும்.

அதனால் ஏன் போட்டிகள் நிறுத்தப்படவேண்டும்? இரு அரசாங்கங்களும் அமர்ந்து வெளிப்புற நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் கிரிக்கெட் மற்றும் விளையாட்டு தொடரும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். அரசியல் பதட்டங்கள் வந்து போகலாம், ஆனால் விளையாட்டு பாதிக்கப்படக்கூடாது" என்று அவர் மேலும் கூறினார்.