jadeja - samson - shami web
கிரிக்கெட்

2026 ஐபிஎல் வர்த்தகம்| ஜடேஜா முதல் ஷமி வரை.. அணி மாறிய 8 வீரர்கள்! யார் யார்? விவரம்!

2026 ஐபிஎல் வீரர்கள் வர்த்தகமானது பல ஆச்சரியப்படுத்தும் மாற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.. ஜடேஜா, சாம்சன், ஷமி, நிதிஷ் ரானா போன்ற வீரர்கள் சர்ப்ரைஸ் மாற்றமாக அமைந்துள்ளனர்..

Rishan Vengai

2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் வர்த்தகத்தில், ஜடேஜா மற்றும் சாம்கரன் ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டு, சஞ்சு சாம்சன் சென்னை அணியில் இணைந்துள்ளார். மேலும், நிதிஷ் ராணா டெல்லி அணிக்கும், அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ அணிக்கும், முகமது ஷமி லக்னோ அணிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் அணிகளின் வலிமையை மாற்றியமைக்கின்றன.

2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 18 வருடங்களாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து முதல் கோப்பையை முத்தமிட்டது.

rcb

இந்தசூழலில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலமானது வரும் டிசம்பர் 15-ம் தேதி நடக்கவிருக்கிறது.. அதற்கு முன்னதாக நவம்பர் 15-ம் தேதியான இன்று தங்களுடைய தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அனைத்து அணிகளும் வெளியிடவிருக்கின்றன..

IPL 2025 Captains

இந்நிலையில் தக்கவைப்பு பட்டியலுக்கு முன்னதாக வர்த்தகம் செய்யப்பட்ட வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது ஐபிஎல் நிர்வாகம்.. அதன்படி 2026 ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்கள் எந்த அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்..

ஜடேஜா, சாம்கரன், சஞ்சு சாம்சன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரரும் ஆல்ரவுண்டருமான ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம்கரன் இருவரும் ராஜ்ஸ்தான் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டிரேட் செய்துள்ளது..

சஞ்சு சாம்சன் மற்றும் சாம்கரன் அவர்களுடைய முந்தைய தொகையான ரூ.18 கோடிக்கும், ரூ.2.4 கோடிக்கும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர். ஜடேஜா அவருடைய முந்தைய தொகையான 18 கோடி ரூபாயிலிருந்து குறைந்து 14 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார்..

வர்த்தகத்தின் படி 2026 ஐபிஎல்லில் ஜடேஜா, சாம்கரன் ராஜஸ்தான் அணிக்கும், சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கும் விளையாட உள்ளனர்..

நிதிஷ் ராணா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து இடதுகை பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். இந்த வர்த்தகம் உண்மையில் ஆச்சரியப்படுத்தும் ஒன்றாகவே இருக்கிறது.. டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்ட வீரரை டெல்லிக்கு விட்டுக்கொடுத்துள்ளது ராஜஸ்தான் அணி.

முந்தைய ஐபிஎல் தொகையான 4.2 கோடி ரூபாயில் டெல்லி அணியில் விளையாடவிருக்கிறார் நிதிஷ் ராணா.. அவருக்கு மாற்றாக டெல்லி அணியிலிருந்து ஆல்ரவுண்டர் டோனோவன்
ஃபெரீராவை 1 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் அணி..

அர்ஜுன் டெண்டுல்கர், மயங்க் மார்கண்டே

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ரூ.30 லட்சத்திற்கு சென்றுள்ளார்..

அதேபோல சுழற்பந்துவீச்சாளர் மயங்க் மார்கண்டேவை கேகேஆர் அணியிலிருந்து ரூ.30 லட்சத்துக்கு வர்த்தகம் செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி..

ஷமி

இந்தியாவின் மூத்த வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியிலிருந்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றுள்ளார். அவர் தன்னுடைய முந்தைய விலையான ரூ.10 கோடிக்கு LSG அணியில் விளையாட உள்ளார்..