RRக்கு வர வேண்டுமா? ஜடேஜா வைத்த பெரிய கோரிக்கை.. நிராகரிக்க முடியாமல் தவிக்கும் அணி நிர்வாகம்?
CSK அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்தின் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தானுக்குச் செல்ல இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
19வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்குவதற்கு, இன்னும் சில மாதங்களே இருக்கின்றன, ஆனால், அதற்கு முன்பே ஐபிஎல் பற்றிய செய்திகள் இணையத்தை வைரலாக்கி வருகின்றன. அதிலும் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் ஏலம் பற்றிய பேச்சுகளே தற்போதைய டாக்கில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் இணைந்து மிகப்பெரிய வர்த்தகம் செய்யப்போவது தொடர்பான பேச்சுவார்த்தைகளே தலைப்புச் செய்திகளாக வலம் வருகின்றன. ஆம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் CSK அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இங்கிலாந்தின் சாம் கரன் ஆகியோர் ராஜஸ்தானுக்குச் செல்ல இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
அதுபோல, RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னைக்கு வர இருப்பதும் உறுதியாகி உள்ளது. ஆனால், ராஜஸ்தான் அணி, தங்கள் பணத்தில் கணிசமான பகுதியை விடுவிக்க வேண்டியிருப்பதாலும், சாம் கரனுக்கு இடமளிக்க ஒரு வெளிநாட்டு வீரரை விடுவிக்க வேண்டியிருப்பதாலும், பரிமாற்றத்திற்கான நிதி விவரங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் மதிப்பீட்டில் உள்ள நிலையில், “ராஜஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்வேன்”என்று ரவீந்திர ஜடேஜா தெளிவுபடுத்தியுள்ளதால் ஒரு கூடுதல் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
37 வயதான அவர், இன்னும் ஒருசில வருடங்கள் ஐபிஎல்லில் விளையாடத் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பு, ஓர் அணியை வழிநடத்தும் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தனது வாழ்க்கையைத் தொடங்கி முதல் இரண்டு சீசன்களில் அந்த அணிக்காக விளையாடிய ஜடேஜாவுக்கு ஏற்கெனவே கேப்டன் பதவி அனுபவம் உள்ளது. 2012 முதல் சிஎஸ்கே விளையாடி வரும் அவர், அவ்வணியின் நட்சத்திர வீரராகவும் மாறினார். அதுபோக, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணியிலும் ஒரு வீரராக உள்ளார். இதற்கிடையே, 2022 சீசனில், கேப்டனாக இருந்த தோனி பதவி விலகிய பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஜடேஜா, சிறிது காலம் வழிநடத்தினார். அவரது தலைமையின்கீழ், CSK எட்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றதால், அவரது பதவிக்காலம் திட்டமிட்டபடி பயனளிக்கவில்லை.
அதன்பிறகு, தோனி மீண்டும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில்தான், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோரை எதிர்கால கேப்டன்களாகக் கருதி வந்த ராயல்ஸ் நிர்வாகம், இப்போது ஜடேஜாவின் கோரிக்கையை தீவிரமாக எடை போடுகிறது. அவரது அனுபவம் மற்றும் தலைமைத்துவ குணங்களைக் கருத்தில்கொண்டு, அணி அவரது நிபந்தனையை ஏற்றுக்கொள்ள விரும்பக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும், வர்த்தகம் இறுதி செய்யப்பட்ட பின்னரே அதுகுறித்த அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும். இதற்கிடையில், சென்னையில், ருதுராஜ் கெய்க்வாட் 2026 சீசனுக்கும் கேப்டனாகத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சனின் வருகை பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் அதே வேளையில், அது கெய்க்வாட்டின் தலைமையின் மீது அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சிஎஸ்கே நிர்வாகம் கெய்க்வாட்டை தங்கள் நீண்டகால தலைவராக வளர்ப்பதில் உறுதியாக உள்ளது, தோனி தொடர்ந்து வழிகாட்டும் பாத்திரத்தை வகிப்பார் எனவும் தெரிகிறது.

