2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் பந்துவீச்சு தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 220 ரன்கள் சராசரியாக கசிவது, பவுலிங் மாற்றங்களில் தவறுகள், மற்றும் சுழற்பந்துவீச்சின் பலவீனம் ஆகியவை இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணமாக உள்ளன. உலகக்கோப்பை வெற்றிக்கான வாய்ப்பை மீண்டும் பெற மாற்றங்கள் அவசியம்.
2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை கலைத்ததிலிருந்தே இந்தியாவின் சர்வதேச டி20 கிரிக்கெட் படுமட்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை சூர்யகுமார் யாதவ் தலைமையில் 52 போட்டிகளில் வெறும் 8-ல் மட்டுமே தோல்வி, வெற்றிச்சராசரி 80சதவிகிதம் என ஒரு இருதரப்பு தொடரில் கூட தோல்வியே காணாத இந்தியா, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அயர்லாந்துக்கு எதிராக படுதோல்வி, இங்கிலாந்துக்கு எதிராக 0-4 என தோல்வி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2-2 என சமன், ஜப்பானுக்கு எதிராக போராடி வெற்றி என்று சுமாரான இருதரப்பு தொடர்களையே கண்டுள்ளது.
அதிலும் இந்தியாவின் பந்துவீச்சு படுமட்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடைசி 6 போட்டிகளில் மட்டும் இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் 1304 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட ஒரு போட்டிக்கு ரன்களை விட்டுக்கொடுக்கும் சராசரி 220ஆக இருக்கிறது. இந்தியாவின் பேட்டிங் வரிசை தலைசிறந்ததாக இருக்கிறது என்பதெல்லாம் சரிதான், ஆனால் எத்தனை போட்டிகளில் உங்களுக்கு பேட்ஸ்மேன்களே வெற்றியை பெற்றுத்தருவார்கள். உங்கள் பேட்ஸ்மேன்கள் 250 ரன்கள் அடித்தால், பந்துவீச்சாளர்கள் 260 ரன்களை விட்டுக்கொடுக்கின்றனர். இது இந்தியாவின் டி20 கிரிக்கெட்டை அழிவிற்கு கொண்டுசெல்லாதா? இப்படியான ஒரு அணியை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் உலகக்கோப்பையை வெல்லமுடியும்.
இவற்றைக்கடந்து இந்தியா டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பட்டியலில் முதல் 5 இடங்களும் இந்த ஒரே ஆண்டில் வந்திருக்கின்றன. பும்ரா ஒருவர் இல்லையென்றால் இந்தியாவின் பந்துவீச்சின் தரம் என்ன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது இந்தியா விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.
இந்தியாவின் இந்த மோசமான பந்துவீச்சு செயல்பாட்டுக்கு பின்னால் 5 காரணங்கள் இருக்கின்றன. முதலில் இந்தியா சரியான பந்துவீச்சு காம்பினேசனில் விளையாடுவதில்லை, 2வது கம்பீர் தலைமையில் இதுவரை இல்லாதளவு 33 பந்துவீச்சாளர்கள் மாற்றிமாற்றி விளையாடப்பட்டுள்ளனர். 3வது இந்தியாவின் பலம் என கருதப்பட்ட சுழற்பந்துவீச்சு இருக்கிறதா? இல்லையா? என்ற பரிதாப நிலையே நீடிக்கிறது. 4வது மோசமான கேப்டன்சி, ஸ்ரேயாஸ் ஐயர் பலநேரங்களில் சுமாரான பவுலிங் மாற்றங்கள் செய்கிறார், முன்கூட்டியான திட்டமிடுதல் அவரிடம் இல்லை. 5வது கம்பீர் தலைமையிலான குழு பவுலர்களை தக்கவைப்பதிலும், அவர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதிலும் கோட்டைவிடுகிறது. அடுத்தபோட்டியில் நாம் விளையாடுவோமா என்ற சந்தேகம் இருக்கும்வரை எந்த வீரராலும் சிறப்பாக செயல்பட முடியாது.
இந்த கடினான சூழலில் சிறந்த டி20 பவுலர்களை கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திலும், நம்முடைய பலமான சுழற்பந்துவீச்சை வளப்படுத்த வேண்டிய இடத்திலும் இந்தியா இருக்கிறது.. !