14 பந்தில் 38 ரன்கள் அடித்த நடராஜன்.. ஆனாலும் UAE-யிடம் இந்தியா தோல்வி!
ஹாங்காங் சிக்சஸ் தொடரில் இந்தியா தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வி. யுஏஇ அணிக்கு எதிராக நடராஜன் 14 பந்தில் 38 ரன்கள் அடித்தாலும், யுஏஇ அணி விக்கெட்டே இழக்காமல் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
6 ஓவர்கள் மட்டுமே கொண்ட ஹாங்காங் சிக்சஸ் தொடர் 6 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவருகிறது. இதில் இந்திய அணி அடுத்தடுத்த 2 போட்டிகளி படுதோல்வியை சந்தித்துள்ளது.
முதலில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 88 ரன்கள் அடித்தது. 89 ரன்கள் அடித்தால் வெற்றிஎன விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய கேப்டன் க்ருணால் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே 5 சிக்சர்களை பறக்கவிட்டு வலுவாக தொடங்கியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய அந்த அணி 3.5 ஓவரிலேயே 91 ரன்களை அடித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் யுஏஇ அணியை எதிர்கொண்டு விளையாடியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 ஓவரில் 94 ரன்கள் அடித்தது. 53 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் என தடுமாறிய நிலையில், 6வது வீரராக களமிறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த டி நடராஜன் 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என பறக்கவிட்டு 14 பந்தில் 38 ரன்கள் அடித்து இந்தியாவை நல்ல டோட்டலுக்கு அழைத்துச்சென்றார்.
ஆனால் 95 ரன்கள் என விளையாடிய யுஏஇ அணி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இலக்கை எட்டி, இந்தியாவிற்கு படுதோல்வியை பரிசளித்தது.

