ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ் web
கிரிக்கெட்

டெல்லியா OR ஆர்சிபியா..? இரண்டு தோழிகளுக்கு இடையே நிகழும் போர்.. கோப்பை யாருக்கு? பலம்-பலவீனம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் சிறந்த தோழிகளாக பார்க்கப்படும் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் இன்று நடக்கும் மகளிர் பிரீமியர் லீக் ஃபைனலில் கோப்பைக்காக மோதவிருக்கின்றனர்.

Rishan Vengai

போட்டிக்களம் என வந்துவிட்டால் 'குருவா? சிஷ்யனா? நண்பர்களா?' என்பதெல்லாம் கிரிக்கெட்டிற்கு தெரியாது.. ஜெயிக்கணும், தன்னுடைய அணிக்காக கோப்பையை உயர்த்தணும் என்பது மட்டுமே ஒவ்வொரு உண்மையான கிரிக்கெட் வீரனுக்கும் வேட்கையாகவே இருக்கும்..

அந்தவகையில் 2026 மகளிர் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டியானது இந்திய கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த தோழிகளாக இருந்துவரும் ஜெமிமா மற்றும் ஸ்மிருதி மந்தனா இடையே நிகழப்போகும் கோப்பைக்கான போராக மாறியுள்ளது.

டெல்லி - ஆர்சிபி

ஒருபக்கம் தொடர்ந்து 3 முறை இறுதிப்போட்டிக்கு சென்று தோல்வியடைந்த ஜெமிமா தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் நிற்கிறது.. மறுபக்கம் ஒவ்வொரு முறையும் கோப்பைக்காக அவமானப்படுத்தப்பட்ட ரசிகர்களின் கோட்டையாக இருக்கும் ஆர்சிபி 2வது கோப்பைக்காக ஸ்மிருதி மந்தனா தலைமையில் காத்திருக்கிறது..

டெல்லிக்கு முதல் கோப்பையா? ஆர்சிபிக்கு இரண்டாவது கோப்பையா? என்ற விவாதம் நிகழ்ந்துவரும் நிலையில், இரண்டு அணிகளுக்குமான பலம் பலவீனத்தை இங்கே பார்த்துவிடலாம்..

ஆர்சிபி 

2025 ஐபிஎல் தொடர் ஒரு சுமாரான சீசானகவே இருந்த ஆர்சிபிக்கு 2026 ஒரு மிகச்சிறந்த சீசனாக இதுவரை இருந்துள்ளது. முதல் 5 போட்டிகளையும் வென்ற ஆர்சிபி நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்று +1.247 புள்ளிகளுடன் முதலிடத்தில் நிற்கிறது. மற்ற 4 அணிகளில் +1 புள்ளிகள் வைத்திருக்கும் ஒரே அணியாக ஆர்சிபி இருக்கிறது. அந்தளவு அந்த அணி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தலைசிறந்து விளங்குகிறது..

Grace Harris

பலம்

ஆர்சிபி அணியின் முதன்மை பலமாக அவர்களின் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சு உள்ளது. ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ் மற்றும் லின்சி ஸ்மித் முதலிய ஸ்பின்னர்கள், எந்த பிட்ச் சூழ்நிலையிலும் சிறப்பாக செயல்படும் ஒரு நம்பிக்கையை தருகின்றனர். இது மிடில் ஓவர்களில் எதிரணி மீது ஆதிக்கம் செலுத்தவும், மிகவும் ஆக்ரோஷமான பேட்டிங் வரிசைகளைக் கூட கட்டுப்படுத்தவும் வழிவகை செய்கிறது. வேகப்பந்துவீச்சில் லாரென் பெல் நம்பிக்கை அளிக்கிறார்..

பேட்டிங்கை பொறுத்தவரையில் டாப் ஆர்டர்களில் கிரேஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் மிரட்டி வருகின்றனர். கிரேஸ் 180.95 ஸ்ட்ரைக்ரேட்டில் மிரட்டிவருகிறார். ஸ்மிருதி மந்தனா அடிக்காதது போல தோன்றினாலும் 300 ரன்களுக்கு 10 ரன்கள் மட்டுமே குறைவாக நிற்கிறார்.

ஸ்மிருதி மந்தனா

பலவீனம்

எலிஸ் பெர்ரி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இல்லாமல் நிலையான 3வது வீரர் கிடைக்காமல் ஆர்சிபி அணி தடுமாறிவருகிறது. பல்வேறு உள்நாட்டு வீரர்களை முயற்சித்தாலும், தொடக்கத்திலேயே கிரேஸ் மற்றும் ஸ்மிருதி அவுட்டாக்விட்டால் ஆரம்ப விக்கெட்டுக்குப் பிறகு இன்னிங்ஸை நிலைத்து நின்று வழிநடத்துவதற்கான குறை ஆர்சிபியில் நீடிக்கிறது. ஒருவேளை அவர்களின் தொடக்க வீரர்கள் மலிவாக ஆட்டமிழந்தால் இது இன்னிங்ஸின் நடுவில் சரிவுக்கு வழிவகுக்கும்.

பூஜா வஸ்திரகர்

அச்சுறுத்தல்

பூஜா வஸ்திரகர் போன்ற முக்கிய வீராங்கனையின் உடற்தகுதி கவலை தரும் அச்சுறுத்தலாகவே உள்ளது. ஒருவேளை அவர் இறுதிப் போட்டிக்கு கிடைக்கவில்லை என்றால், அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதலில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தக்கூடும். அவர் கடைசி போட்டியில் விளையாடியதால் அந்த அச்சுறுத்தல் ஆர்சிபிக்கு ஏற்படாது என்றே தோன்றுகிறது.

டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2026 மகளிர் பிரீமியர் லீக்கானது ஏற்ற இறக்கமாகவே இருந்துள்ளது. அவர்கள் தங்களுடைய முதல் 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியை சந்தித்திருந்தன. ஆனால் இறுதியில் கம்பேக் கொடுத்திருக்கும் அவ்வணி, 4வது முறையாக தொடர்ந்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது.

இருப்பினும் இறுதிப்போட்டியில் பலம்வாய்ந்த ஆர்சிபி அவர்களுடைய முதல் கோப்பைக்கு பெரிய தடையாக இருக்கிறது. ஏற்கனவே டெல்லி அணி இறுதிப்போட்டியில் ஆர்சிபியிடம் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jemimah Rodrigues

பலம்

டெல்லி அணியின் பலம் அவர்களின் 'பெரிய போட்டியை வெல்லக்கூடிய மனநிலையில்' உள்ளது. 3 முறை இறுதிப்போட்டியில் தோன்றிருந்தாலும் அழுத்தமான போட்டியில் சிறப்பாக விளையாடக்கூடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வெர்மா, மாரிசேன் காப் மற்றும் லாரா உல்வர்ட் ஆகியோரைக் கொண்ட குழுவிற்கு நாக் அவுட்களின் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது தெரியும்.

ஆஃப்-ஸ்பின் மற்றும் லெக்-ஸ்பின் உள்ளிட்ட அவர்களின் சுழல் பன்முகத்தன்மை, அவர்களுக்கு ஒரு மிஸ்ட்ரி தாக்குதலை கொடுக்கிறது. 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் நந்தனி சர்மா, 14 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஸ்ரீ சரணி மற்றும் அனுபவம் வாய்ந்த மாரிசேன் காப் ஆகியோர் பந்துவீச்சு யூனிட்டை பலமானதாக மாற்றுகின்றனர்.

Marizanne Kapp

பலவீனம்

டெல்லி அணியில் உள்நாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. மாரிசேன் காப்பைத் தவிர , டெத்தில் பந்து வீசக்கூடிய அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் இல்லை. இது ஒவ்வொரு ஆட்டத்திலும் காப்பை சார்ந்து இருக்க வேண்டிய கட்டயாத்தை டெல்லிக்கு ஏற்படுத்துகிறது. மேலும் டெத்தில் அவர்களுடைய பந்துவீச்சு தாக்குதலை கணிக்கக்கூடியதாக ஆக்குகிறது.

டெல்லி கேபிடல்ஸ்

அச்சுறுத்தல்

டெல்லிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மிடில் ஆர்டரின் சீரற்ற தன்மை இருக்கிறது. டாப் 4 வீரர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்களாக இருந்தாம், டாப் ஆர்டரில் இறுதிவரை ஆடாமல் போனால், லோயர்-மிடில் ஆர்டர் ஆட்டத்தை முடிக்க பெரும்பாலும் சிரமப்பட வேண்டியிருக்கும். ஆர்சிபி போன்ற சிறந்த டெத் பவுலர்களைக் கொண்ட அணிக்கு எதிராக, ஃபினிஷிங் பவர் இல்லாதது டெல்லிக்கு ஆபத்தானது. மேலும் அழுத்தம் நிறைந்த போட்டியில் ஜெமிமாவிற்கு கேப்டன்ஸியில் அனுபவம் இல்லாததும் அச்சுறுத்தும் ஒன்றாக இருக்கிறது. பவுலர்கள் அடிவாங்கினால் டெத்தில் என்னசெய்யவேண்டும் என்ற குழப்பம் அவரிடம் அதிகமாக நீடிக்கிறது.

சிறந்த மோதல்..?

Marizanne Kapp

ஆர்சிபி அணியின் பெரிய பலமாக தொடக்க ஜோடியான கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா விளங்குகின்றனர். இந்த சீசனில் 180.95 ஸ்ட்ரைக் ரேட் உடன் கிரேஸும், 290 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனாவும் விளங்கினாலும், மரிசான்னே காப் இருவருக்கும் எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளார். டி20 போட்டிகளில் 13 முறை இருவரையும் டிஸ்மிஸ் செய்துள்ளார்.

பிட்ச் எப்படி இருக்கிறது..?

நவி மும்பையுடன் ஒப்பிடும்போது போட்டி நடைபெறவிருக்கும் வதோதராவின் மேற்பரப்புகள் பெரும்பாலும் சராசரியான ஸ்கோர்களை உருவாக்கியுள்ளன. இந்த சீசனில் ஆர்சிபியுடன் ஒப்பிடும்போது டெல்லி கேபிடல்ஸ் அணி இங்கு மிகச் சிறந்த ரெக்கார்டை பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் - ஆர்சிபி

இந்த ரெக்கார்ட் அவர்களுக்கு ஒரு நன்மையைத் தரும் என்று டெல்லி நம்புவார்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோப்பை யாருக்கு..?

ஸ்மிருதி மந்தனா - ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இரண்டு அணிகளும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சரிசமமான பலத்துடன் இருக்கிறார்கள். பேட்டிங், பந்துவீச்சில் சில குறைகள் இருந்தாலும் அவர்களிடன் சிறந்த ஸ்பின் அட்டாக் இருக்கிறது. போட்டி நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கே கோப்பை சென்று சேரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது..