இந்தியா vs பாகிஸ்தான்| ஒரே போட்டி.. 10 வினாடிக்கு 40 லட்சம்.. 2ஆயிரம் கோடி வருவாய் இழக்கும் ICC!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் நடைபெறாவிட்டால், சில மதிப்பீடுகளின்படி, சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 2,200 கோடிக்கும் மேல்) இழப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில் புறக்கணிப்பிற்கான காரணங்களைக் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையையோ அல்லது தடைகளையோ பிசிபி தனது நிலைப்பாட்டை ஐசிசிக்கு முறையாகத் தெரிவித்த பின்னரே பரிசீலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் நடைபெறாவிட்டால், சில மதிப்பீடுகளின்படி, சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய ரூபாய் மதிப்பில் 2,200 கோடிக்கும் மேல்) இழப்பு ஏற்படும் என தெரிய வந்துள்ளது. பாகிஸ்தான் - இந்தியா இடையிலான பதற்றமான உறவுகளுக்கு மத்தியில் பல அணிகள் பங்கேற்கும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இவ்விரு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அதிலும், வருவாய் ஈட்டித் தரும் இந்த முக்கியப் போட்டியில் பாகிஸ்தான் பின்வாங்கியிருப்பது, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ள கட்டுரையில், ’பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அது மில்லியன் கணக்கான டாலர் வருவாயை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான ஒவ்வொரு போட்டியும் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது எனக் குறிப்பிடப்படுகிறது. அந்த வகையில், ஒரு முக்கியப் போட்டியின் 10 வினாடி விளம்பர நேரத்திற்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதல் 250 கோடி ரூபாய் வரை விளம்பர வருவாய் இழப்பைச் சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஐசிசியின் நிதி மற்றும் உலக அமைப்புடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கும் இந்திய ஊடக உரிமையாளரான ஜியோ ஸ்டாருக்கும் கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தும். ஒருவேளை பாகிஸ்தான் போட்டியில் பங்கேற்காமல் விலகினால், அது இந்தியாவுக்கு முழுப் புள்ளிகளைப் பெற்றுத் தரும் என்றாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது நிதி அபராதங்களை விதிக்கும் அதிகாரம் ஐசிசியிடம் உள்ளது’ என அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

