ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், நாள்தோறும் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற ஜூடோ இறுதிப்போட்டியில், இந்தியாவின் அஸ்மிதா டே தங்கப்பதக்கத்தை வேட்டையாடினார். மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில், ஒரு பதற்றமான போராட்டத்திற்குப் பிறகு, அஸ்மிதா டே கச்சிதமான நேரத்தில் தனது காலைப் பயன்படுத்தி கனடாவின் ஹைடி குவாச்சை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஜூடோ வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
அஸ்மிதாவின் வெற்றியானது, இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுப் பயணத்திற்கென ஒரு பொன்னான அத்தியாயத்தைச் சேர்ப்பதோடு, நாட்டின் தற்காப்புக் கலை வீரர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க நாளாகவும் அமைந்துள்ளது. இதே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 60 கிலோ ஜூடோ இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்ஷ் சிங் ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸை வீழ்த்தி தங்கத்தை வென்றார். இதன்மூலம், 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை, 5 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் 8ஆவது இடத்தில் உள்ளது.
தெற்கு திரிபுராவின் பெலோனியாவில் பிறந்தவர் அஸ்மிதா டே. 23 வயதான இவர், ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பத்தில் தடகளத்தில் ஈடுபட்டிருந்த இவர், ஒரு பயிற்சியாளரால் தனது திறமை கண்டறியப்பட்ட பிறகு ஜூடோவிற்கு மாறினார். திரிபுரா விளையாட்டுப் பள்ளியில் தனது திறமைகளை வளர்த்துக் கொண்ட அவர், பின்னர் போபாலில் உள்ள சாய் பிராந்திய மையத்தில் இடம்பெற்றார், அங்கு அவரது வளர்ச்சி வேகம் பெற்றது. 2022-இல், பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய கேடட் மற்றும் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, சர்வதேசப் பதக்கம் வென்ற திரிபுராவின் முதல் ஜூடோ வீராங்கனை என்ற பெருமையை அஸ்மிதா பெற்றார்.
அதன்பிறகு, அவர் குவைத் நகரில் நடந்த ஆசிய ஓபன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும், மக்காவோவில் நடந்த ஜூனியர் ஆசிய கோப்பையில் தங்கப் பதக்கத்தையும், 2024 காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும், மேலும் 2025-ல் காசாபிளாங்காவில் நடைபெற்ற ஆப்பிரிக்க ஓபன் பட்டத்தையும் வென்று, ஜூடோவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
மீராபாய் சானு – பளுதூக்குதல்
ஷர்மிளா தங்கர் - பாரா-தடகளம்
திலீப் காவித் – பாரா-தடகளம்
அஸ்மிதா டே - ஜூடோ
ஹர்ஷ் சிங் - ஜூடோ
ரிஷிகாந்த சிங் – பளுதூக்குதல்
ராஜா முத்துப்பாண்டி – பளுதூக்குதல்
சர்வேஷ் குஷாரே – தடகளம்
வல்லூரி அஜய் பாபு – பளுதூக்குதல்
ஞானேஸ்வரி யாதவ் – பளுதூக்குதல்
குல்வீர் சிங் – தடகளம்
ஹர்ஜிந்தர் கவுர் – பளுதூக்குதல்
முகம்மது பாசித் – பாரா தடகளம்
முரளி ஸ்ரீசங்கர் – தடகளம்
லவ்பிரீத் சிங் – பளுதூக்குதல்
ஜந்து குமார் – பாரா பவர்லிஃப்டிங்
பிந்தயாராணி தேவி – பளுதூக்குதல்
ஷில்பா ஷைலா – பாரா-தடகளம்
சீமா கலிராம்னா – தடகளம்