\
Gulveer Singh creates history becomes first Indian to win Mens 10000m medal at CWG 2026
Gulveer Singhx page

CWG 2026 | கொட்டிய கனமழையிலும் ஓடிய கால்கள்.. வெள்ளியை வென்று ’முதல் இந்தியர்’ ஆன குல்வீர் சிங்!

இந்திய ராணுவத்தின் 'கிரெனடியர்ஸ்' பிரிவில் நாயப் சுபேதாராக பணியாற்றி வரும் இவர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர், ஒரு மைல் மற்றும் அரை மாரத்தான் ஆகியவற்றில் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார்.
Published on

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங் ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்து பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் (Gulveer Singh) வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். குல்வீர் சிங் 10,000 மீட்டர் தூரத்தை 27 நிமிடங்கள் 49.78 வினாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் கை ராபின்சன் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற நிலையில், ஐல் ஆஃப் மேன் நாட்டின் டேவிட் முலார்க்கி வெண்கலப் பதக்கம் வென்றார்.

குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் ஆண்களுக்கான 10,000 மீட்டர் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றார். தவிர, ஒட்டுமொத்தமாக காமன்வெல்த் 10,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய தடகள வீரரானார். இதற்கு முன்பு, கடந்த 2010ஆம் ஆண்டு கவிதா ராவத் பெண்கள் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். மேலும், கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக, நீண்டதூர ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் கென்யா மற்றும் உகாண்டா நாட்டு வீரர்களைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவைச் சேர்ந்த குல்வீர் சிங், இந்தியாவை உலக அரங்கிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

Gulveer Singh creates history becomes first Indian to win Mens 10000m medal at CWG 2026
CWG2026 | பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் இழப்பு.. மோசமான பெருமை சேர்த்த இந்திய வீராங்கனை!

முன்னதாக, ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் கடும் மழை பெய்த நிலையில், அந்த ஈரமான பாதையிலும் குல்வீர் சிங் மிகவும் பொறுமையாகவும் கவனமாகவும் ஓடி சாதனை படைத்தார். 25 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், கடைசி சுற்றில் காட்டிய அதிரடி வேகத்தின் மூலம் 3-ஆவது இடத்திலிருந்து 2-ஆவது இடத்திற்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 5,000மீ மற்றும் 10,000மீ இரண்டிலும் தங்கம் வென்றிருந்தார்.

மேலும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார். இந்திய ராணுவத்தின் 'கிரெனடியர்ஸ்' பிரிவில் நாயப் சுபேதாராக பணியாற்றி வரும் இவர், 5,000 மீட்டர், 10,000 மீட்டர், ஒரு மைல் மற்றும் அரை மாரத்தான் ஆகியவற்றில் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும், 2025-இல் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஓடிய முதல் இந்தியர் மற்றும் அரை மாரத்தானை 60 நிமிடங்களுக்குள் ஓடி முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். உள்ளரங்கப் போட்டிகளில், 5,000 மீட்டரை 12:59.77 வினாடிகளில் ஓடி, 13 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் ஓடி முடித்த முதல் ஆசிய தடகள வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com