ipl web
விளையாட்டு

RCB vs GT| ஃபைனலில் வெல்லப்போவது யார்..? எந்த அணி பலமாக உள்ளது? விவரம்!

இரண்டாவது கோப்பைக்கான வேட்டைக்காக அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பெங்களூரு – குஜராத் அணிகள் மோதுகின்றன.

PT WEB

ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. 18 ஆண்டுகள் காத்திருந்து கடந்த ஆண்டு முதல் கோப்பையை வென்ற பெங்களூரு, இந்த சீசனிலும் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் ஆட்டத்தை கட்டுப்படுத்தி இரண்டாவது கோப்பையை நோக்கி முன்னேறுகிறது. ரசிகர்கள் யார் வெல்வார்கள் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

செய்தியாளர் - சந்தானம்

2026 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லப்போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளித்த ஐபிஎஸ் தொடர் கடைசி நாளை எட்டியுள்ளது. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

Ahmedabad, Narendra modi stadium

அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 7:30 மணிக்குப் போட்டி தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி 18 ஆண்டுகளுக்கு பின் கடந்த ஆண்டு முதல் கோப்பையை வென்றிருக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

மற்றொருபுறம், ஒப்பீட்டளவில் பலம் வாய்ந்த அணியாக இல்லை என்று கருதப்பட்டாலும், எல்லாத் தடைகளையும் மீறி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது கில் தலைமையிலான குஜராத் அணி. 2022 ஐபிஎல்லில் முதல் கோப்பையை வென்ற குஜராத், கடந்த ஆண்டு சாம்பியனான பெங்களூரு என இரண்டு அணிகளும் தங்களின் இரண்டாவது கோப்பையை வெல்லத் தீவிரம் காட்டுகின்றன.

rajat patidar

குஜராத் அணியைப் பொறுத்தவரை தொடரின் முதல் பாதியில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், பிற்பாதியில் தொடர்ந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றிபெற்று, தனது வலிமையை நிரூபித்தது. கேப்டன் ஷுப்மன் கில் 722 ரன்களும், அவருக்குப் பக்கபலமாக விளையாடும் சாய் சுதர்சன் 710 ரன்களும் இந்த சீசனில் குவித்ததே, குஜராத் அணி இறுதிப் போட்டி வரை வர முக்கிய காரணம்.

அதேபோன்று பந்துவீச்சில் ரபாடா 28 விக்கெட், ரஷித் கான் 19 விக்கெட், சிராஜ் 18 விக்கெட், ஹோல்டர் 17 விக்கெட் என சிறப்பான பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக உள்ள அணியாக திகழ்கிறது.

Shubman Gill

விராத் கோலி, தேவ்தத் படிக்கல், வெங்கடேஷ் ஐயர், ரஜத் பட்டிதார் ஆகியோர் பேட்டிங்கிலும், க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரசிக் தார் சலாம் ஆகியோர் பந்துவீச்சிலும் கலக்கி வருகின்றனர். கூடுதல் பலமாக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பவுலர் ஹசல்வுட்டும் இருக்கிறார். லீக் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருந்தாலும், குவாலிஃபயர்-1 ஆட்டத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி, 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

குஜராத் அணி, பேட்டிங்கில் கில், சாய் சுதர்சன், பட்லர் ஆகிய மூவரை மட்டுமே நம்பியுள்ளது. பெங்களூரு அணியின் புவனேஷ்வர் குமார் இந்த சீசன் முழுவதும் பவர் பிளேவில் விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அப்படி விக்கெட் விழும் பட்சத்தில் எளிமையாக பெங்களூரு அணி கோப்பையை வெல்லும். எனினும், போட்டி நடைபெறுவது குஜராத் அணியின் சொந்த ஊர் மைதானமான நரேந்திர மோடி மைதானம் என்பதால், இது அவர்களுக்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.