இனி CSK மீள்வது கடினம்.. கோப்பை வெல்ல 5 ஆண்டுகள் ஆகலாம்! 5 படுமோசமான காரணிகள்!
2026 ஐபிஎல் முழுவதும் சிஎஸ்கே ஒரு சராசரி அணியாகவே இருந்து, 14 போட்டிகளில் 8 தோல்வியுடன் சீசனிலிருந்து வெளியேறியது. குழுவாக திட்டமிடல் தோல்வி, காயமடைந்த வீரர்கள் மேலாண்மை சிக்கல், இம்பேக்ட் விதி தவறான பயன்பாடு, ருதுராஜ் கேப்டன்சியில் அனுபவக்குறை, பிளெமிங் தலைமையிலான கோச்சிங் குழுவின் மந்தமான தந்திரங்கள் ஆகியவை அடுத்த கோப்பை 5 ஆண்டுகள் தள்ளிச் செல்லும் அபாயத்தை உருவாக்குகின்றன.
2026 ஐபிஎல் தொடர் முழுவதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு சுமாரான அணியாகவே தெரிந்தது. கடந்த ஐபிஎல் தொடரில் 10வது இடத்தில் முடித்த அந்த அணி, நடப்பு சீசனிலும் தொடர் தோல்விகளால் 10வது இடத்திலேயே தான் தங்கியிருந்தது. அதற்குபிறகு சில கம்பேக் போட்டிகளை சென்னை கண்டாலும், அவர்களால் பிளேஆஃப் வரை அதை கொண்டுசெல்ல முடியவில்லை.
14 போட்டிகளில் 8 தோல்விகளையும் 6 வெற்றிகளை மட்டுமே கண்ட சென்னை 3வது அணியாக 2026 ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த மோசமான வெளியேற்றத்திற்கு பின்னால் பல படுமோசமான காரணிகள் உள்ளன. இதனால் தோனி கட்டமைத்த சிஎஸ்கே என்ற பிராண்ட் இனிவரும் காலங்களில் உடைந்து சிதற அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது அணியில் ஏற்பட்டிருக்கும் பல குளறுபடிகள், சறுக்கல்கள் 5 கோப்பைகள் வென்ற அணியை அடுத்த கோப்பைக்கு எடுத்துச்செல்வது கடினமான பாதையாக மாற்றுகிறது.
இந்தசூழலில் ஏன் சென்னை அணியால் இனி மீண்டுவருவது கடினம், எதனால் அவர்களால் அடுத்த கோப்பை வெல்வது சிரமம் என்பதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்..
5 படுமோசமான காரணிகள்!
1. குழுவாகவே தோல்வி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026 ஐபிஎல் தொடரில் ஒரு குழுவாகவே தோற்றுள்ளது. அணி வீரர்களை பாதுகாப்பது, வீரர்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது, சரியான வீரர்களை சரியான இடத்தில் விளையாடாதது, இம்பேக்ட் விதியை முறையாக பயன்படுத்த தவறியது, தவறான முடிவுகள் என ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாகவே சிஎஸ்கே சொதப்பியது. இதன் காரணமாக அவ்வணி தங்களை முழுமையாகவே சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
2. வீரர்கள் கையாள்வதில் சிக்கல்
முந்தைய ஐபிஎல் சீசன்களில் அடிக்கடி காயம் ஏற்படக்கூடிய தீபக் சாஹரை தேவையான போட்டிகளில் மட்டும் பயன்படுத்திவிட்டு, மீதமுள்ள போட்டிகளில் ரெஸ்ட் கொடுத்து விளையாடவைத்தது தோனி தலைமையிலான நிர்வாகம். ஆனால் தற்போது போட்டியின் வெற்றி தோல்வியை உறுதிசெய்யக்கூடிய கலீல் அகமது, ஆயுஸ் மாத்ரே, ஓவர்டன் என பல வீரர்கள் காயத்தால் வெளியேறியது சென்னை அணிக்கு பெரும் பின்னடவை கொடுத்தது.
அதிலும் மிகவும் மோசமான விசயமாக அணியில் சிறப்பாக விளையாடிய ஆயுஷ் மாத்ரேவை காயத்துடன் விளையாட வைத்தது மட்டுமில்லாமல், அவரை களத்தில் ரன் ஓடவும் வைத்து அவரை நிரந்தரமாக அணியிலிருந்து வெளியேற்றியது சென்னை அணியின் வீரர்கள் மேனேஜ்மெண்ட் மீது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
3. தவறான முடிவுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் பல தவறான முடிவுகளால் வெற்றிபெற வேண்டிய போட்டிகள் பலவற்றை கோட்டைவிட்டது. இம்பேக்ட் வீரர்களை சரியாக பயன்படுத்த தவறியது, தவறான வீரர்களை அணிக்குள் தேர்வுசெய்தது, சொந்த மண்ணில் ஆடுகளத்தை சரியாக கணிக்க தவறியது என பல கண்மூடித்தனமான முடிவுகளை கையில் எடுத்தது. 5 கோப்பைகள் வென்ற அணியின் நிர்வாகமா இது என்ற கேள்வியை எழுப்பியது.
4. கேப்டன்சியில் சொதப்பல்
சிஎஸ்கே போன்ற பிராண்ட் உள்ள அணிக்கு கேப்டன்சி செய்வது கடினமான விசயம் தான் என்றாலும், உண்மையாகவே கேப்டன்சி செய்வதில் ருதுராஜ் கெய்க்வாட் நிறைய பின்தங்கியே இருக்கிறார். களத்திற்கு வெளியே திட்டமிடுவது, களம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து திட்டமிடுவது என்ற இரண்டு குவாலிட்டிகளும் அவரிடம் இல்லை. அவர் கோச்சிங் ஸ்டாஃப்களை நம்பியே இருக்கிறார், பயிற்சியாளர்களால் களத்திற்கு வெளியே திட்டமிடுதலை செய்ய முடியுமே தவிர, களத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து திட்டமிடுதல் கேப்டனின் கைகளிலேயே உள்ளது. தோனி போன்ற ஜாம்பவானின் கீழ் விளையாடியிருக்கும் அவருக்கு, அந்த குவாலிட்டி இன்னும் வரவில்லை.
5. பயிற்சியாளர்கள் குழு கலைக்கப்பட வேண்டுமா?
நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் தோனியால் தான் ஸ்டீபன் பிளெமிங் சிறந்த கோச்சாக இருக்கிறார், தோனி இல்லையென்றால் அவர் ஒன்றுமேயில்லை என்ற விவாதம் அதிகமாக இருந்தது. அதற்கு பிளெமிங் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும், நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவின் திட்டமிடுதல் ஒரு முழுமை இல்லாமலேயே தொடர் முழுவதும் இருந்தது. மேலும் ஒவ்வொரு தவறின்போதும் கோச்சிங் ஸ்டாஃப் என்னதான் செய்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. சிறந்த வீரர்கள் அணியிலிருந்தும் அவர்களிடமிருந்து திறமையை வெளிக்கொண்டுவர பயிற்சியாளர்கள் தவறவிட்டுவிட்டார்களோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஐபிஎல் போன்ற ஒரு அப்டேட்டட் உலகத்தரமான கிரிக்கெட் லீக்கிள் பயிற்சியாளர்கள் ஸ்மார்ட்டாக செயல்படாதது அதிருப்தியையே தெரிகிறது. தொடரிலிருந்து வெளியேறிய பிறகு பயிற்சியாளர் பதவியை தொடர்வது மேனேஜ்மெண்ட்டின் முடிவு என பிளெமிங் கூறியிருந்தார்.
அணியில் இருக்கும் குறைகளை கலைய வேண்டுமானால் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டிய கட்டாயம் சிஎஸ்கே அணிக்கு இருக்கிறது. ஒருவேளை பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டால் புதிய நிர்வாகத்துடன், புதிய அணியை கட்டமைப்பதோடு, அதை வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்வது நீண்டகால தேடலாக மாறிவிடும். பல ப்ரூவன் ஸ்டார் வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணி சொதப்பிவரும் நிலையில், அதேநிலைமையில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோப்பை வெல்லவேண்டுமானால் அடுத்த 5 வருடங்களுக்கு கடினப்பட வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அனைத்து பிரச்னைகளையும் கலைந்து சிஎஸ்கே கம்பேக் கொடுக்கவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது..

