ronaldo  x / fifa
விளையாட்டு

41 வயதில் மிராக்கல்.. 15 நிமிடத்தில் ஹாட்ரிக்.. 1000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ!

அல் நஸ்ர் அணிக்காக ஹாட்ரிக் கோல் அடித்ததோடு, முதல் BOAT விருதையும் வென்று மறக்கமுடியாத இரவை கொண்டாடினார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Rishan Vengai

41 வயதான ரொனால்டோ, சவூதி புரோ லீக் போட்டியில் 15 நிமிடத்தில் ஹாட்ரிக் அடித்து அல் நஸ்ர் அணியை 5-3 என வெற்றிக்கு அழைத்தார். 985 கோல்களை அடைந்த அவர், 1000 கோல்களின் வரலாற்றை நோக்கி 15 கோல்கள் மட்டுமே பின்தங்கியுள்ளார். மேலும், முதல் BOAT விருதை வென்று ரசிகர்களின் வாக்கெடுப்பில் சாதனை படைத்தார்.

சவூதி புரோ லீக் போட்டியில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் அல் குலூத் அணியை எதிர்த்து விளையாடியது ரொனால்டோவின் அல் நஸ்ர் அணி. இரண்டு அணிகளும் மாறிமாறி கோல்கள் அடிக்க, விறுவிறுப்பான முதல் பாதிக்குப் பிறகு ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது, ஆட்டம் யார் பக்கம் போகப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு தொற்றிக்கொள்ள, இரண்டாம் பாதியை ​​ரொனால்டோ தன் கையில் எடுத்துக்கொண்டார். 15 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 கோல்களை அடித்த போர்ச்சுக்கல்லின் சூப்பர் ஸ்டார், அணியை 5-3 என வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

அவர் 66வது மற்றும் 72வது நிமிடங்களில் கோல் அடித்ததோடு, 81வது நிமிடத்தில் தனது ஹாட்ரிக் கோல்களைப் பூர்த்தி செய்து, அல் நஸ்ர் அணிக்குத் தேவையான நிம்மதியை அளித்தார். 2023-ல் கிளப்பில் சேர்ந்ததிலிருந்து இது அவரது ஏழாவது ஹாட்ரிக் ஆகும். மொத்தமாக அவருக்கு இது 67வது ஹாட்ரிக் கோல்களாகும்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய கோல்களின் எண்ணிக்கையை 985ஆக மாற்றிய அவர், 1000 கோல்கள் என்ற வரலாற்றுக்கு இன்னும் 15 எண்ணிக்கையிலேயே பின்தங்கியுள்ளார்.

வியாழக்கிழமையன்று ரொனால்டோ கொண்டாடுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. 41 வயதான அவர், முதல் BOAT (Ballon d'Or of All Time) விருதின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ரசிகர்களின் வாக்கெடுப்பில், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அவர் 2008-ல் வென்ற Ballon d'Or விருது, லியோனல் மெஸ்ஸியின் 2012-ஆம் ஆண்டு சாதனையை முறியடித்தது. ரொனால்டோவிடம் ஏற்கனவே ஐந்து அதிகாரப்பூர்வ Ballon d'Or விருதுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.