முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், 2 கோடியே 37 லட்ச ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. கடந்த 10ஆம் தேதி முதல் யாக சால பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு அதிகாலை 5.30 மணியளவில் முருகப்பெருமானின் தாய் தந்தையரான மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அருள் பார்வையில் பரிவார மூர்த்திகள் மற்றும் கோயிலின் கம்பீரமான 7 நிலைகள் கொண்ட ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது 10 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது, அப்போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது.
இதேபோல் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள தங்கவேலுக்கும் மகா அபிஷேகம் நடபெற்றது. மேலும் கருவறையில் உள்ள துர்க்கை அம்பாள், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய விக்ரகங்களுக்கும் மகா அபிஷேகம், தீபாராதனை நடத்தப்பட்டது..
திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியின் போது லட்சக்கணக்கான மக்கள் வருவார் என எதிர்பார்க்கப்பட்டதால், 12 இடங்களில் மக்களுக்காக அன்னதானம் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்யதுள்ளது.. அதுமட்டுமல்லாமல் இன்று ஒரு நாள் திருப்பரங்குன்றம் வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திருப்பரங்குன்றம் கோவிலை சுற்றி 3000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை மாநகர் காவல் ஆணையாளர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் போடப்பட உள்ளது. குற்ற சம்பவங்கள் தடுக்கும் வண்ணம் சிசிடிவி கேமராக்கு பொருத்தப்பட்டுள்ளது. பத்து இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் மற்றும் மாநகராட்சி குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பிடங்கள் என மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது..
கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பின் தற்போது கும்பாபிஷேகம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..