tiruchendur murugan temple kumbabishekam news update
திருச்செந்தூர் முருகன்எக்ஸ் தளம்

மொத்தமாக தயாரான திருச்செந்தூர்.. 37 வருடத்திற்குப் பிறகு திறக்கும் வாசல்! முக்கிய தகவல்

மொத்தமாக தயாரான திருச்செந்தூர்.. 37 வருடத்திற்குப் பிறகு திறக்கும் வாசல்! அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்
Published on

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நாளைய தினம் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்

தலையா கடல் அலையா ? என்ற கேள்விக்கேற்ப பலரும் திருச்செந்தூர் படையெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவில்.. குடமுழக்கு விழா குறித்து அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவலை விரிவாக பார்க்கலாம்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உலகப்புகழ்பெற்ற முருகன் சன்னதியாக இருக்கிறது. பக்தர்களின் வருகை தொடர்ந்து, அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கோவிலில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் கோயில் ராஜகோபுரம், கோவிலின் வெளிப்பிரகாரம், கோவிலை சுற்றி இருந்த பக்தர்கள் தங்கும் அறைகள் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு பிறகு நாளைய தினம் குடமுழுக்கு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழா என்பதால் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயில் வருகை தரவுள்ள பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக சுமார் 6000க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கடந்த ஒன்றாம் தேதி முதல் கோவிலின் ராஜகோபுரம் அருகே 8000 சதுர அடியில் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, 76 குண்டங்களில் யாகசாலை பூஜைகள் நடந்து வருகிறது. தொடர்ந்து, நாளைய தினம் காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. காலை 5 மணிக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, 6:15 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெறுகிறது. மேளதாளங்கள் முழங்க 37 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலின் மேற்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக கடம் புறப்பாடு நடைபெறுகிறது.

சரியாக 6.50 மணிக்குள் ராஜகோபுரத்தில் உள்ள 9 கலசங்களுக்கும் போத்திகள் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட இருக்கிறது.. அதே நேரத்தில் மூலவர், சண்முகம், வள்ளி, தெய்வானை மற்றும் பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பக்தர்கள் குடமுழுக்கு விழாவை நேரடியாக காண்பதற்காக கடற்கரை பகுதியில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து குடமுழுக்கு விழாவை நேரடியாக காண்பதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 65 இடங்களில் எல்இடி திரைகள் மூலம் பக்தர்கள் காணுவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை அதிகாலை கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதால், இன்று மதியத்திற்கு மேல் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாளைய தினம் குடமுழுக்கு விழா நிறைவடைந்த பிறகு, பல்வேறு பூஜைகளுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க நேரம் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாகவே திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா, பங்குனி உத்திரம், மாசி திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். முருகனை வேண்டி வந்தால் தங்களுக்கு வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது மட்டுமல்லாமல், வாழ்வில் எல்லா நன்மைகளையும் பெறலாம் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதற்கு வருடம் தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் சாட்சியாக உள்ளது. திருச்செந்தூரின் கடலோரத்தில் வரும் பாடல் போல, கடலோரத்தில் தலையா கடல் அலையா என்று கேட்கும் அளவுக்கு பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. அதே நேரம், கோவிலுக்கு செல்லும்போது பக்தர்கள் அனைவரும் கூட்ட நெரிசலில் பாதுகாப்பை உறுதி செய்யவும் அறிவுறுத்தபடுகிறது. திருச்செந்தூர் குடமுழுக்கு விழா நேரலையை முழுமையாக பார்க்க, புதியதலைமுறை யூடியூப் சேனலோடு இணைந்திருங்கள்..

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com