reuters, x reuters, x page
இந்தியா

முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் பக்கம்.. இந்தியாவின் அழுத்தம் காரணமா? - எக்ஸ் தளம் அளித்த விளக்கம்!

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளக் கணக்கு முடக்கம் குறித்து, எக்ஸ் தளம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

Prakash J

சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸின் (REUTERS) பிரதான எக்ஸ் தள கணக்கு, இந்தியாவில் சமீபத்தில் முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கை காரணமாக கணக்கு முடக்கப்பட்டதாக எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், ராய்ட்டர்ஸ் முகமையின் பிற எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் இயங்கின. இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, "ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை நிறுத்தி வைப்பதற்கு இந்திய அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் X உடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தடை குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசாங்கம் X நிறுவனத்திடம் கேட்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்திடம் தடையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தது.

x page

கடந்த மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பல கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை, தவறுதலாக இப்போது நடைமுறைப் படுத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், ராய்ட்டர்ஸின் 'எக்ஸ்' கணக்கு, இந்தியாவில் சுமார் 24 மணிநேர முடக்கத்துக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் சமூக வலைதளக் கணக்கு முடக்கம் குறித்து, எக்ஸ் தளம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 3ஆம் தேதி ராய்ட்டர்ஸ் உட்பட இந்தியாவில் 2,355 கணக்குகளை, ஒரு மணி நேரத்திற்குள் நியாயப்படுத்தாமல் முடக்க அரசாங்கம் உத்தரவிட்டதாக எக்ஸ் தளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அது, “ஜூலை 3, 2025 அன்று, இந்திய அரசாங்கம் X நிறுவனத்திற்கு IT சட்டத்தின் பிரிவு 69Aஇன் கீழ் ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்டு போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்கள் உட்பட இந்தியாவில் 2,355 கணக்குகளைத் தடுக்க உத்தரவிட்டது. மேலும், இணங்கத் தவறினால் குற்றவியல் பொறுப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு மணி நேரத்திற்குள் நியாயப்படுத்தாமல் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியது.

x page

மேலும் மறு அறிவிப்பு வரும் வரை கணக்குகள் தடுக்கப்பட வேண்டும் என்று கோரியது. பொதுமக்களின் கண்டனத்திற்குப் பிறகு, ராய்ட்டர்ஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் வேர்ல்டைத் தடைநீக்க அரசாங்கம் X நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவுகள் காரணமாக இந்தியாவில் நடந்து வரும் பத்திரிகை தணிக்கை குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். X அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறது. இந்தியாவில் அமைந்துள்ள பயனர்களைப் போலல்லாமல், இந்த நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக சட்ட சவால்களைக் கொண்டுவரும் திறனில் X இந்திய சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்கள் நீதிமன்றங்கள் மூலம் சட்ட தீர்வுகளைத் தொடருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று அது கூறியுள்ளது.