முடக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளம்.. 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
சர்வதேச செய்தி முகமையான ராய்ட்டர்ஸின் (REUTERS) பிரதான எக்ஸ் தள கணக்கு, இந்தியாவில் முடக்கப்பட்டது. சட்டப்பூர்வ கோரிக்கை காரணமாக கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, முடக்கப்பட்ட எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேவேளையில், ராய்ட்டர்ஸ் முகமையின் பிற எக்ஸ் தள கணக்குகள் இந்தியாவில் இயங்கின. இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, "ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை நிறுத்தி வைப்பதற்கு இந்திய அரசுக்கு எந்த கட்டாயமும் இல்லை. இந்தப் பிரச்னையைத் தீர்க்க நாங்கள் X உடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். தடை குறித்து விளக்கம் அளிக்குமாறு அரசாங்கம் X நிறுவனத்திடம் கேட்டுள்ளது.
மேலும், அந்த நிறுவனத்திடம் தடையை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது பல கணக்குகளை முடக்க எக்ஸ் நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை, தவறுதலாக இப்போது நடைமுறைப் படுத்தப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், ராய்ட்டர்ஸின் 'எக்ஸ்' கணக்கு, இந்தியாவில் சுமார் 24 மணிநேர முடக்கத்துக்குப் பின் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.