ஷேக் ஹசீனாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை, நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாகச் சாடியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பிப்ரவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வெளியாகியுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, வங்கதேசத்தில் அமைதியின்மையைத் தூண்டக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
இதற்கிடையே ஷேக் ஹசீனாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பை, நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கடுமையாகச் சாடியுள்ளார். அவர், “முகமது யூனுஸ் மற்றும் அவரது ஜிஹாதி படைகளால் ஹசீனா அநீதியானவர் என்று அறிவிக்கப்பட்ட செயல்களை, அவர்கள் (யூனுஸ்) செய்யும்போது அவை நீதியானவை என்று அறிவிக்கின்றன. யாராவது நாசவேலைச் செயல்களைச் செய்யும்போது, தற்போதைய அரசாங்கம் அவர்களைச் சுட உத்தரவிடும்போது, அரசாங்கம் தன்னை ஒரு குற்றவாளி என்று சொல்லிக் கொள்வதில்லை. அப்படியானால், கடந்த ஜூலை மாதம் நாசவேலைச் செயல்களைச் செய்தவர்களைச் சுட உத்தரவிட்டதற்காக ஹசீனா ஏன் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்? நீதியின் பெயரால் கேலி செய்வது எப்போது முடிவடையும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், 2006ஆம் ஆண்டு யூனுஸுக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை திரும்பப் பெற வேண்டும் என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். வங்கதேசத்தில் மாணவர்களின் புரட்சிக்குப் பிறகு, அங்கு நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. வன்முறைக்குப் பிறகு, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1994ஆம் ஆண்டு, தஸ்லிமா நசுரீன் எழுதிய 'லஜ்ஜா' என்ற புத்தகம் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டது. ஆனால், இந்தப் புத்தகம் வேறு நாடுகளில் அதிகளவில் விற்பனையானது. இந்தப் புத்தகம் குறித்து இஸ்லாமிய மதவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்ததால், அவர் வங்கதேசத்தைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன்பிறகு, அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.