
வங்கதேசத்தில் நடந்த மக்கள் போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா போராட்டக்காரர்களை வான் வழியாக தாக்கவும் ஆபத்தான ஆயுதங்களை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தவும் உத்தரவிட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தீர்ப்பு வங்கதேசத்தில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் கடந்தாண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 1,400 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 22 ஆயிரம் பேர் காயமடைந்திருந்தனர். பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்த போது ஏற்பட்ட வன்முறைகளுக்கு பின் மிகமோசமான நிகழ்வாக இது பார்க்கப்பட்டது. இது குறித்து தொடரப்பட்ட வழக்கில்தான் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. மக்கள் புரட்சிக்கு பின் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது. ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்
வங்கதேசத்தில் கடந்தாண்டு மக்கள் போராட்டத்தின் போது ஆயிரத்து 400 பேர் கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஹேக் ஹசீனா போராட்டக்காரர்களை வான் வழியாக தாக்கவும் ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தவும் பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிட்டார் என நீதிபதி தெரிவித்தார். ஹசீனாவின் செயல் மனித குலத்திற்கே எதிரானது எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது. கொலைகளுக்கு உத்தரவிட்டது அமைதியை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இத்தீர்ப்பை நீதிபதிகள் அளித்துள்ளனர்.
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டதை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் கடும் பதற்றம் எழுந்துள்ளது. பல இடங்களில் ஹசீனா ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் கலைந்து செல்ல வைக்கின்றனர். தலைநகர் டாக்காவில் அசம்பாவிதங்களை தடுக்க காவல் துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஹசீனாவின் கட்சியினர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கலவரத்தில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது
தனக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். தீர்ப்பு என்ன என முடிவு செய்த பின்னரே வழக்கு விசாரணையே தொடங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணை முழுவதும் ஒருதலைபட்சமாக இருந்ததாகவும் தனது தரப்பு வாதங்களை தெரிவிக்க போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் ஹசீனா கூறியுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் அவர் மறுத்துள்ளார். இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஹசீனாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய அரசின் முடிவு என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு வங்கதேச அரசு கடிதம் எழுதியுள்ளது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு தஞ்சம் அளித்திருப்பது நட்புக்கும் நீதிக்கும் எதிரானது என வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதாகவும் எனவே ஹசீனாவை ஒப்படைப்பது இந்தியாவின் கடமை என்றும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மாணவர் புரட்சி வெடித்தபின் ஆகஸ்ட் 5ஆம் தேதி ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். டெல்லியில் அவர் ரகசியமான இடத்தில் வசிப்பதாக தகவல்கள் உள்ளன.