Prime Minister Narendra Modi called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan FB
இந்தியா

மீண்டும் மாநில அந்தஸ்தை பெறுமா ஜம்மு காஷ்மீர்?

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்து பேசினர். இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vaijayanthi S

மீண்டும் மாநில அந்தஸ்தை பெறுமா ஜம்மு காஷ்மீர் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது குறித்த பெருஞ்செய்தியினை பார்க்கலாம். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவு 370 மற்றும்35A, 2019 ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. அன்றிலிருந்து மாநில உரிமை மீட்பு ஒரு முக்கிய அரசியல் கோரிக்கையாகவே இருந்து வருகிறது.

கடந்த 2023 ஆம்ஆண்டு டிசம்பரில் 370 நீக்கத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்த உச்சநீதிமன்றம், விரைவில் மாநில அந்தஸ்து மீட்கப்பட வேண்டும் என மத்தியஅரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஒமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதுபோன்ற சூழலில்தான், ஜம்மு-காஷ்மீர் மாநில உரிமை மீட்பு தொடர்பான சட்ட மசோதா, தற்போதைய மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரக்கூடும் என டெல்லி அரசியலில் தீவிரமாகப் பேசப்படுகின்றன.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குடியரசுத் தலைவர் திரெளபதிமுர்மு ஆகியோருக்கிடையே ஒரே நாளில் நடைபெற்ற திடீர் சந்திப்பு இதற்கு வலு சேர்த்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்டு இன்று ஆறாவது ஆண்டு என்பதும், மீண்டும் மாநில அந்தஸ்து பெறுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. #StatehoodBill என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

ஒருவேளை மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்பட்டால், புதிய தேர்தல் நடத்தப்படும் எனவும் ஊகங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், இன்று எதுவும் நடக்காது; அதிர்ச்சி வேண்டாம்; நல்லதும், கெட்டதும் ஏதும் நடக்கப்போவதில்லை எனக் கூறியுள்ளார். கடந்த ஐந்தாண்டுகளாக, பல தேசியகட்சிகள் மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சமீபத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், மாநில அந்தஸ்துஉடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும்,மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது ஜந்தர் மந்தரில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டு, மாநில உரிமை வேண்டும் என முழக்கமிட்டது. மொத்தத்தில், ஜம்மு -காஷ்மீருக்கான புதிய சட்ட மசோதாவரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு, தேசிய அரசியல் சூழ்நிலையை இன்னும் பரபரப்பாக்கியுள்ளது.