தர்மேந்திர பிரதான் எக்ஸ் தளம்
இந்தியா

மாணவர்கள் எதிரொலி.. ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்.. இவர் பாஜகவுக்கு ஏன் முக்கியம்? பின்னணி என்ன?

மற்ற அரசியல் தலைவர்கள்போல் நேரடியாக அரசியலுக்கு வராமல், ஏபிவிபி அமைப்பில் 12 ஆண்டுகள் சேவை செய்து, மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக உயர்ந்து, அதன் பின்புதான் தேசிய அரசியலுக்குள் தர்மேந்திர பிரதான் வந்தார்.

PT WEB

கட்டுரையாளர் : போத்தி ராஜ்

டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) நடத்திவரும் போராட்டம், எந்த அளவுக்கு நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறதோ, அதே அளவு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பெயரும் விவாதிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் குளறுபடிகள், கேள்வித்தாள் வெளியானது, நீட் தேர்வு ரத்து, நீட் மறுதேர்வு, 21 மாணவர்கள் தற்கொலை என ஏராளமான குழப்பங்கள் நடந்தது. இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொடக்கத்தில் சிஜேபி கட்சியினர் நடத்திய போராட்டத்துக்கு குறைவாக இருந்த இளைஞர்கள் கூட்டம் அடுத்தடுத்து பெருமளவில் தன்எழுச்சியாக வரத்தொடங்கியது. நீட் கேள்வித்தாள் வெளியானது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விரைவு நீதிமன்றங்களும் அமைக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

தர்மேந்திர பிரதான்

ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான்

ஆனால், நீட் தேர்வில் முறைகேடுகளும், கேள்வித்தாள் வெளியாவதும் 2024ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ’ஒவ்வொரு முறையும் தர்மேந்திர பிரதான் சரி செய்துவிடுவோம், இனிமேல் நடக்காமல் நடவடிக்கை எடுப்போம்’ என உறுதியளித்தும் பயனில்லை. ஆதலால், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்வதுதான் (தற்போது ராஜினாமா செய்துவிட்டார்) ஒரே தீர்வு எனக் கூறி சிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடி வருகிறார்கள். மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த கட்சியைச் சேர்ந்த மாணவர் அமைப்பினரும் மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் போராட்டம் ஏறக்குறைய ஒரு மாதத்தை நிறைவடைய இருக்கும் நிலையில், இத்தனை நாட்களாக மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கோரி மத்திய அரசு ஏன் அழுத்தம் தரவில்லை. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசுக்கு தர்மேந்திர பிரதான் எவ்வளவு முக்கியம், அவரின் பின்னணி என்ன என்பது குறித்து கட்டுரையில் பார்க்கலாம்.

யார் இந்த தர்மேந்திர பிரதான்

14 வயதிலேயே அரசியல் பயணம், பாரம்பரிய அரசியல் குடும்பம், பாஜகவின் இளைஞர் படையின் முகம், வளர்ந்துவரும் தலைவர்களில் முக்கியமானவர், எதையும் கச்சிதமாக முடிப்பவர், ஆர்எஸ்எஸ்க்கு நெருக்கமானவர் எனப் பல முகங்களை உடையவர் தர்மேந்திர பிரதான். ஒடிசா மாநிலம் தால்சர் மாவட்டத்தில் கடந்த 1969ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி தர்மேந்திர பிரதான் பிறந்தார். இவரின் தந்தை முன்னாள் மத்திய அமைச்சர் திபேந்திர பிரதான், பாரம்பரியமாக பாஜகவில் இருந்தவர். தர்மேந்திர பிரதான் தனது 14 வயதிலேயே ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏபிவிபி அமைப்பில் சேர்ந்து அரசியலுக்குள் நுழைந்தார். பள்ளி, கல்லூரிகளில் ஏபிவிபி அமைப்பின் பல்வேறு பொறுப்புகளில், பதவிகளில் தர்மேந்திர பிரதான் இருந்தார். முதுநிலை பட்டப்படிப்பாக மானிடவியல் பாடத்தை புவனேஸ்வரில் உள்ள உட்கல் பல்கலைக்கழகத்தில் தர்மேந்திர பிரதான் படித்து முடித்தார். மற்ற அரசியல் தலைவர்கள்போல் நேரடியாக அரசியலுக்கு வராமல், ஏபிவிபி அமைப்பில் 12 ஆண்டுகள் சேவை செய்து, மாணவர் அமைப்பின் தேசிய தலைவராக உயர்ந்து, அதன் பின்புதான் தேசிய அரசியலுக்குள் தர்மேந்திர பிரதான் வந்தார்.

திருப்புமுனையாக அமைந்த தேர்தல்

2000ஆம் ஆண்டில் ஒடிசாவில் நடந்த தேர்தலில் பல்லாஹாரா தொகுதியில் போட்டியிட்ட தர்மேந்திர பிரதான், அபார வெற்றி பெற்றார், இதுதான் அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின், 2004இல் தியோகர் தொகுதியில் மக்களவை வேட்பாளராக போட்டியிட்டு தர்மேந்திர பிரதான் வெற்றி பெற்றார். 2004 முதல் 2006 வரை பாஜகவின் இளைஞர் பாசறையான, யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவராக தர்மேந்திர பிரதான் இருந்தார்.

2026ஆம் ஆண்டில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூன் 6ஆம் தேதி முதல் சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

மத்திய அமைச்சராக மாறிய பிரதான்

2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன், அதில் பெட்ரோலியத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், இவரின் காலத்தில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜானா திட்டத்தை நாடு முழுவதும் தர்மேந்திர பிரதான் விரிவுபடுத்தினார். அதன்பின் 2019 முதல் 2021 வரை மத்திய ஸ்டீல் மற்றும் இரும்பு வளங்கள் துறை அமைச்சராக பிரதான் இருந்தார். 2021இல் மத்திய கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றார். இந்நிலையில் 2026ஆம் ஆண்டில் நீட் கேள்வித்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜூன் 6ஆம் தேதி முதல் சிஜேபி கட்சியினர் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

நீட் கேள்வித்தாள் லீக்: பிரதானின் முரண்பாடான பேச்சு

நீட் கேள்வித்தாள் வெளியானது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறுவது முதல்முறை அல்ல. 2024ஆம் ஆண்டில் பலமுறை இவ்வாறு மாற்றி மாற்றி பிரதான் பேசியுள்ளார். 2024ஆம் ஆண்டில் நீட் குளறுபடிகளை மறுத்த பிரதான், பின்னர் ஒப்புக்கொண்டார், இப்போதும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளார். ‘அல்ட்நியூஸ்’ ஆய்வின்படி, 2024 ஜூன் 4ஆம் தேதி நீட் இளநிலைக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. ஜூன் 12ஆம் தேதிவரை நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள், குற்றச்சாட்டு குறித்து பிரதான் ஏதும் பேசவில்லை. ஜூன் 13ஆம் தேதிதான் தர்மேந்திர பிரதான் தனது மெளனத்தைக் கலைத்தார்.

நீட் கேள்வித்தாள் வெளியானது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறுவது முதல்முறை அல்ல. 2024ஆம் ஆண்டில் பலமுறை இவ்வாறு மாற்றி மாற்றி பிரதான் பேசியுள்ளார்.

2024 ஜூன் 13:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நீட் தேர்வில் நடந்த குளறுபடிகள் குறித்து குற்றச்சாட்டு வைத்தார். அதற்குப் பதில் அளித்த தர்மேந்திர பிரதான், “ நீட் இளநிலை நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள் கசியவில்லை. 24 லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுதி முடித்துவிட்டனர், எந்தக் கேள்வித்தாளும் கசியவில்லை, அதற்கு ஆதாரமும் இல்லை” என்றார்.

2024, ஜூன் 16:

தர்மேந்திர பிரதான் தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுத்த அறிக்கையில், “இரு தேர்வு மையங்களில் சில முறைகேடுகள் நீட் தேர்வில் நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. என்டிஏ அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது, அவர்களை தப்பிக்க விடமாட்டோம். என்டிஏ அமைப்பில் இன்னும் மேம்பாடு செய்ய வேண்டியுள்ளது, குற்றவாளிகள் யாரையும் விட்டுவைக்கமாட்டோம் கடுமையான தண்டனை கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

2024, ஜூன் 20:

தர்மேந்திர பிரதான் ஊடகச் சந்திப்பில் பேசுகையில், “சில தனிப்பட்ட சம்பவங்கள் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு ஆபத்தில் தள்ளாது. இந்த தவறு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே நடந்துள்ளது. சில இடங்களில் நடந்தமைக்காக தேர்வை ரத்து செய்ய மாட்டோம். நேர்மையாகப் படித்த மாணவர்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம்” என்றார்.

2024, ஜூன் 21:

தர்மேந்திர பிரதான் ஊடகச்சந்திப்பில், “சில குறிப்பிட்ட இடங்களில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. இளைஞர்கள், மாணவர்கள் நம்பிக்கை குலைக்கப்பட்டதற்கு நான் பொறுப்பேற்கிறேன், இதற்கு நான் தார்மீக பொறுப்பேற்கிறேன். நாட்டின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும், தரம் மற்றும் வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும், மேலும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் கடின உழைப்பு மதிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்

2024, ஜூன 23:

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசுகையில், “கடந்த 7 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு குறித்து உறுப்பினர் 70 முறை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 7 ஆண்டுகளில் வினாத்தாள் கசிவு நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை முழுப் பொறுப்புடன் இந்த அவையின் முன்னிலையில், தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

தர்மேந்திர பிரதானும் போராளிதான்…

தர்மேந்திர பிரதானும் மாணவராக இருந்தபோது, கேள்வித்தாள் வெளியானதைக் கண்டித்து போராட்டம், உண்ணாவிரதம் இருந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1983ஆம் ஆண்டில் தால்சர் கல்லூரியில் தர்மேந்திர பிரதான் படித்து வந்தார். அப்போது கல்லூரியில் உள்ள ஏபிவிபி அமைப்பில் பிரதான் உறுப்பினராக இருந்தார். 1985ஆம் ஆண்டில், அந்த அமைப்பின் மாணவர் சங்கத் தலைவராக பிரதான் உயர்ந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் 1995ஆம் ஆண்டில் ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டார். 1997ஆம்ஆண்டில் ஒடிசாவில் நடந்த பொதுத்தேர்வில் மாநில அளவில் கேள்வித்தாள் கசிந்தது, தேர்வில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தர்மேந்திர பிரதான் தலைமையில் 1,500 மாணவர்கள் திரண்டு புவனேஸ்வரில் உள்ள மாநில தலைமைச்செயலகத்துக்கு பேரணி சென்றனர். அப்போது மாணவர்களை போலீஸார் தடுத்தபோது, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து, ஆர்எம்டி கல்லூரியின் முதல்வர் பிரசாந்த் ராவத் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “சட்டப்பேரவையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது பிரதானும் போலீஸாரால் தாக்கப்பட்டார்” என்பதை உறுதி செய்தார்.

தர்மேந்திர பிரதானும் மாணவராக இருந்தபோது, கேள்வித்தாள் வெளியானதைக் கண்டித்து போராட்டம், உண்ணாவிரதம் இருந்தவர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு காலத்தில் தர்மேந்திர பிராதனும் கேள்வித்தாள் கசிந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்காகவும், மாணவர்கள் எதிர்காலத்துக்காகவும் போராட்டமும் நடத்தியுள்ளார், பேரணியும் சென்றுள்ளார். இப்போது அவர் பொறுப்புவகித்த துறையிலேயே முறைகேடு நடந்தது பேசுபொருளானது.

பாஜகவுக்கு ஏன் தர்மேந்திர பிரதான் முக்கியம்?

1.ஆர்எஸ்எஸ், பாஜக விஸ்வாசி

தர்மேந்திர பிரதான் பணத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ நேரடியாக அரசியலுக்குள் வரவில்லை. மாணவர் அமைப்பில் சேர்ந்து வளர்ந்து 40 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், பாஜகவுக்கும் தீவிர விசுவாசியாக இருந்துள்ளார். ஆளும் பாஜக அரசியல் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் கருதப்பட்டதால், இத்தனை நாட்கள் நடவடிக்கை எடுக்க பாஜக தயங்கியது.

2. ஒடிசாவில் ஓபிசி வாக்குகள்

ஒடிசாவில் உள்ள சாஸா சமூகத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திர பிரதான். ஒடிசாவில் உள்ள 3ஆவது பெரிய சமூகம் பிரதான். ஓபிசி வாக்குகள், ஒடிசாவில் அதிகம் என்பதால், வாக்கு வங்கியைச் சிதைத்துக் கொள்ளும் வகையில், தர்மேந்திர பிரதானுக்கு அழுத்தம் தரப்படாது என அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள்.

3. நம்பிக்கைக்குரிய தேர்தல் பொறுப்பாளர்

தர்மேந்திர பிரதான் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதால், பாஜக பல மாநிலங்களில் கால் ஊன்ற தனது திட்டங்களால் உதவியுள்ளார். பீகார், கர்நாடகா, ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், ஒடிசாவில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பிரதான் இருந்து பாஜக ஆட்சி அமைய திட்டம் வகுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஓபிசி வாக்குகள், ஒடிசாவில் அதிகம் என்பதால், வாக்கு வங்கியைச் சிதைத்துக் கொள்ளும் வகையில் தர்மேந்திர பிரதானுக்கு அழுத்தம் தரப்படாது என அரசியல் வல்லுநர்கள் கருதினார்கள்.
நவீன் பட்நாயக்

4. ஒடிசாவில் பாஜக காலூன்ற உதவியவர்

ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் தலைமையிலான நவீன் பட்நாயக், அவரின் தந்தை ஆகியோர்தான் ஆதிக்கம் செலுத்தி ஆட்சி செய்தனர். அதை உடைத்து, பாஜகவை ஆட்சியில் அமரச் செய்தவர் தர்மேந்திர பிரதான். ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த நவீன் பட்நாயக்கைச் சாய்த்து, அங்கு பாஜக ஆட்சியை முதன்முதலில் கொண்டுவர உதவியவர் தர்மேந்திர பிரதான். அதற்கான திட்டங்களை வகுத்துக் கொடுத்தல், பிரசார உத்திகள் ஆலோசனை, பிஜேடியை ராஜதந்திரமாக காலி செய்ய திட்டமிடல் ஆகியவற்றை கச்சிதமாக பிரதான் செய்தார்.

5. பாஜக, ஆர்எஸ்எஸ் நம்பிக்கை

ஆர்எஸ்எஸ், பாஜகவில் நம்பிக்கை மிகுந்த, உயர்மட்டத் தலைவர்களில் ஒருவராக தர்மேந்திர பிரதான் இன்று மாறியுள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜகவுக்கு ஏராளமான பங்களிப்புகளை பிரதான் செய்து, ஒரு சொத்தாக மாறிவிட்டார். அதனால்தான் பிரதான் மீது எவ்வளவு பெரிய விமர்சனங்கள் எழுந்தபோதிலும் அவரை விட்டுக்கொடுக்காமல் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கேடயமாக இதுநாள் வரை நின்றன.

பாஜக

6. பாஜகவின் ’ராஜினமா இல்லா கொள்கை’

பாஜகவைப் பொறுத்தவரை, கடந்த 12 ஆண்டுகள் ஆட்சியில் சில அமைச்சர்கள் மட்டுமே உடல்நலக்குறைவால் ராஜினாமா செய்திருக்கிறார்கள். இதுபோல் சர்ச்சையால் ராஜினாமா செய்தது இல்லை. 2014ஆம் ஆண்டில் என்டிஏ ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் ராஜினாமா கோரிக்கையை எழுப்பி வருகின்றன. ஆனால், ராஜினாமா என்ற பேச்சு இல்லா கொள்கையை பாஜக வைத்துள்ளது. ஆனாலும் விவகாரம் முற்றிய நிலையில், தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்துள்ளனர்.

2014ஆம் ஆண்டில் என்டிஏ ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் எதிர்க்கட்சிகள் ராஜினாமா கோரிக்கையை எழுப்பி வருகின்றன. ஆனால், ராஜினாமா என்ற பேச்சு இல்லா கொள்கையை பாஜக வைத்துள்ளது.

பெரிய அளவு புரட்சி, போராட்டம் இல்லை

விவசாயிகள் போராட்டம் செய்தது போன்று பெரிய அளவில் இளைஞர்கள், மாணவர்கள் நாடுமுழுவதும் கிளர்ச்சியாக வந்து போராடவில்லை. இதுபோன்ற சிறிய அளவிலான கூட்டத்தை பாஜக அரசு இரும்புக்கரம் கொண்டு எளிதாக ஒடுக்கிவிடும். டெல்லி ஜந்தர் மந்தர் தவிர பல்வேறு மாநிலங்களில் போராட்டம் என்பது தீவிரமாகவில்லை, எனென்றால், சில மாநிலங்களில் மட்டுமே எதிர்க்கட்சிகள் ஆளுகின்றன, பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

இளைஞர்களின் கோபமாக தர்மேந்திர பிரதான், இன்று மாறியதற்கு முக்கியக் காரணம் வேலையின்மைதான். ஏனென்றால், மத்திய புள்ளியில் துறை அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 15.9% சதவீதமாக இருக்கிறது, இது மத்திய அரசின் கணி்ப்பைவிட அதிகமாகும்.
அபிஜித் தீப்கே

இளைஞர்கள் கோபத்தின் மையமாக பிரதான் மாறியது ஏன்?

இளைஞர்களின் கோபமாக தர்மேந்திர பிரதான், இன்று மாறியதற்கு முக்கியக் காரணம், வேலையின்மைதான். ஏனென்றால், மத்திய புள்ளியில் துறை அறிக்கையின்படி, 15 முதல் 29 வயதுள்ள இளைஞர்களின் வேலையின்மை 15.9% சதவீதமாக இருக்கிறது, இது மத்திய அரசின் கணி்ப்பைவிட அதிகமாகும். குறிப்பாக, ஜென்சி பிரிவினரிடையே இந்த வேலையின்மை பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு வருகையால் நிறுவனங்களில் திடீரென ஆட்குறைப்பு, பல்வேறு பிரச்னைகளால் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பது, இதில் இப்போது கேள்வித்தாள் கசிந்த விவகாரம் இளைஞர்கள் கோபத்தில் எண்ணெய் வார்த்ததுபோல் ஆகிவிட்டது. அது மட்டுமல்ல, 2024ஆம் ஆண்டில் நீட் கேள்வித்தாள் கசிந்தபோது தர்மேந்திர பிரதான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறவிட்டார், இந்தக் கல்வி முறையே பயனற்றதாகிவிட்டது. ஆதலால், தனது துறையின் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதானை பதவி விலக சிஜேபி கட்சியினர் வலியுறுத்தினர். அதன் விளைவு, இன்று அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இன்னொரு புறம், தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கும் கரப்பான் பூச்சி கட்சிக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.