மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவாரா? மத்திய அரசு இன்று இறுதி முடிவு!
நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து டெல்லியில் இளைஞர்கள் மாதக்கணக்கில் போராடி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை தாக்குதலில் 6 வயது சிறுவன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம். தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, புதிய சட்டம், தேசிய தேர்வு ஆணையம் அமைத்தல், மாணவர்களுக்கு இழப்பீடு, வயது தளர்வு, மேலும் தர்மேந்திர பிரதான் ராஜினாமா உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்துள்ளன.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் இப்போராட்டம் மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.
போராட்டங்களை கைவிட வேண்டுமானால் 3 முக்கிய நிபந்தனைகளாக, பொதுத்தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, தவறுகளுக்கு பொறுப்பேற்பு, மாணவர்கள் உரிமைகள் பாதுகாப்பு ஆகியவற்றை கொண்ட புதிய சட்டம், தற்போதைய தேசிய தேர்வு முகமையை கலைத்துவிட்டு சட்ட வரம்புக்குட்பட்ட தேசிய தேர்வு ஆணையம் அமைக்க வேண்டும் மற்றும் வினாத்தாள் கசிவு, தேர்வு ரத்து, தள்ளிவைப்பு போன்றவற்றால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு இழப்பீடு, வயது வரம்பு தளர்வு உள்ளிட்ட சலுகைகள் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மேலும் தற்போதைய வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.
இந்தசூழலில் போராட்டாக்காரர்களிடம் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவரும் மத்திய அரசு, இன்றும் கலந்தாலோசிக்க முடிவுசெய்துள்ளது. மேலும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் குறித்தும் முடிவெடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

