shubhanshu shukla pt web
இந்தியா

பருந்தாகுது ஊர்க்குருவி.. விமான சத்தத்தின் மீதான காதல் விண்வெளிக்கு இழுத்துச் சென்ற கதை!!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா.. இந்த பெருமைக்குரிய தருணத்தில், சுபான்ஷு சுக்லா என்ற பெயர் உலக மேடையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

Uvaram P

முதல் இந்தியர்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இன்று மதியம் 12.01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஸ்பேஸ் எக்ஸின் Falcon 9 rocket விண்ணில் பாய்ந்தது. குறிப்பாக கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதள வளாகம் 39Aவில் இருந்து இந்த ராக்கெட் விண்ணிற்குப் புறப்பட்டது. இந்த இடம் 1969ல் நாசாவின் அப்பல்லோ 11 மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனுக்கு புறப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்‌ஷியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், 4 விண்வெளி வீரர்கள் இதில் பயணம் மேற்கொண்டுள்ளனர். கமாண்டர் பெக்கி விட்சன் தலைமையிலான இந்த விண்வெளிக் குழுவில், சுபன்ஷு சுக்லா மிஷன் பைலட்டாகவும், ஹங்கேரிய விண்வெளி வீரர் திபோர் கபு மற்றும் போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோர் மிஷன் நிபுணர்களாகவும் செயல்படுகின்றனர். விண்வெளி வீரர்களால் ‘க்ரேஸ்’ என அழைக்கப்படும் இந்த ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலம் ஜூன் 26 மாலை 4.30 மணியளவில் விண்வெளி நிலையத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழு 14 நாட்களுக்கு அங்கே தங்கியிருந்து சுமார் 60 விதமான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

சுபான்ஷுவின் இந்த பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இந்தியர்களின் பயணம் தொடங்கியிருக்கிறது. முன்னதாக, 1984ம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் ஷர்மா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியராக மாறி இருக்கிறார் சுபான்ஷு.

இந்தியர்களின் நம்பிக்கை

விண்ணில் பறக்கத் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே நாட்டு மக்களோடு உரையாற்றிய சுபான்ஷு சுக்லா, “தற்போது, ​​நாங்கள் பூமியை வினாடிக்கு 7.5 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறோம். என் தோளில் இந்திய கொடியை ஏந்தியிருக்கிறேன். இது ஐ.எஸ்.எஸ்-க்கான எனது பயணத்தின் தொடக்கமல்ல; இது இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தின் தொடக்கமாகும்” எனத் தெரிவித்திருக்கிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார்” எனத் தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சுபான்ஷு சுக்லா

shubhanshu shukla

சரி இந்த நேரத்தில் ‘சுக்ஸ்’ என அழைக்கப்படும் சுபான்ஷு சுக்லாவின் பின்னணி குறித்து பார்க்கலாம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, 1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி பிறந்தவர். சிறுவயதில் இருந்தே விண்வெளி தொடர்பாகவும் விமானம் தொடர்பாகவும் சுக்லாவிற்கு இருந்த ஆர்வம் குறித்து அவரது சகோதரி தெரிவித்ததை தி இந்து செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அவரது சகோதரி கூறுகையில், “குழந்தையாக இருக்கும்போது சுக்லா விமான கண்காட்சிக்கு சென்றிருந்தார். பின் விமானம் மீது ஏற்பட்ட ஆர்வம் குறித்து சொன்னார். விமானத்தின் வேகம் மற்றும் அந்த சத்தம் தன்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது குறித்தும் சொன்னார். ஆனால், அந்த நேரத்தில் இவ்வளவு சீக்கிரம் தன் கனவை அடைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

சுக்லாவின் பயணம்

சுபான்ஷு சுக்லா, கடந்த 2005ம் ஆண்டு ராணுவ பயிற்சியை முடித்து, தேசிய பாதுகாப்பு அகாடமியில் கணினி அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார். இந்திய அறிவியல் கழகத்தில் பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் போர் விமானியாக சேர்ந்தார்.

Su-30 MKI, MiG-21, MiG-29, Jaguar, Hawk உட்பட பல்வேறு போர் விமானங்களை இயக்கி இருக்கும் சுபான்ஷு, சுமார் 2 ஆயிரம் மணி நேரத்திற்கு போர் விமானங்களை இயக்கிய அனுபவமிக்க நபராக மாறி இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு இஸ்ரோவிடமிருந்து அழைப்பைப் பெற்ற சுக்லா, விண்வெளி மருத்துவ நிறுவனத்தால் (IAM) விண்வெளி வீரர் தேர்வு செயல்பாட்டிலும் சேர்க்கப்பட்டார். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வீரர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறார். பின்னர், சுக்லாவிற்கு முழு விண்வெளி வீரராவதற்கான அனைத்து பயிற்சிகளும், (கடந்த 2020 டூ 2021ம் ஆண்டில்) ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஸ்டார் சிட்டியில் உள்ள யூரி ககாரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் வழங்கப்பட்டுள்ளது. தொடர் பயிற்சிகளின் மூலம் ஒரு முழு விண்வெளி வீரராக மாறிய சுபான்ஷு, ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

சுபான்ஷு குறித்து சிலாகித்து பேசும் அவரது சகாக்கள், அதிக மனவலிமை கொண்டவர் என்றும், தொழில்நுட்ப ரீதியாக பல நுட்பங்களை அறிந்தவர் என்று நெகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில் தனது மனைவி காம்னா குறித்து நெகிழ்ச்சி பதிவிட்டிருக்கும் சுபான்ஷு, மனைவி இல்லாமல் இது சாத்தியமில்லை என்றும், அனைத்திலும் அவரது பங்களிப்பு இருப்பதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு தனது காதலி காம்னாவை திருமணம் செய்துகொண்ட சுபான்ஷுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.