”இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததற்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்புடன் பேசாததே காரணம்” என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளாத நாடுகளுக்குப் புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கும் 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்துக்கு வரவில்லை என்றால் இந்தியா மீதான வரி அதிகரிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மீதான வரியை 500% வரை உயர்த்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க எம்.பி லிண்ட்சே கிரஹாம் கூறியுள்ளார்.
அதாவது, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வந்தபோதும் இன்னும் ஒருமனதாகத் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த நிலையில், ”இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறாததற்கு பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் ட்ரம்புடன் பேசாததே காரணம்” என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்துள்ளார்.
பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், "ஒப்பந்தத்திற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன. அதிபர் ட்ரம்ப்தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி, ட்ரம்பை அழைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா அதற்குத் தயக்கம் காட்டியது. இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம். இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமுடன் நாங்கள் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்தோம். அவர்களுக்கு முன்பே இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் கருதினோம். ஆனால், அவர்கள் வரவில்லை" என்று தெரிவித்தார். ஆனால், இது எப்போது நடைபெற்றது என்கிற நாட்குறிப்பை லுட்னிக் தரவில்லை. ஆகையால், இது கடந்த ஆண்டின் மத்தியில் நடைபெற்றிருக்கலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர். கடந்த ஆண்டு நியூயார்க் டைம்ஸ் மற்றும் ஒரு ஜெர்மன் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கைகள், ஜூலை மாதம் ட்ரம்ப் மோடியை நான்கு முறை என்று அழைத்ததாகத் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் விவசாய விளைபொருட்களுக்கு ஏற்றபடி, இந்திய சந்தைகள் திறக்கப்படவேண்டும் என அந்நாடு வலியுறுத்தியதாகவும் அதற்கு இந்தியா தயங்கியதாகவும் கடந்தகாலங்களில் செய்திகள் வெளியாகின. இதனால்தான் இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் முடங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், லுட்னிக்கின் கருத்து வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்கியது ஒருபுறமிருக்க, சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தைத் தாமே மேற்கொண்டதாக ட்ரம்ப் அடிக்கடி கூறிவருகிறார்.
இதை இந்தியா ஏற்கவில்லை. இதில் ட்ரம்புக்கு எந்தப் பங்கும் இல்லை என பிரதமர் மோடியே தொலைபேசி அழைப்பின் வாயிலாக ட்ரம்பிடம் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதேபோல், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பை இந்தியா ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் பாகிஸ்தான் இறுகப் பிடித்துக்கொண்டது. இதனாலேயே அது ஓர் உயர்வையும் கண்டு வருகிறது. இதையடுத்தே, இந்தியாவிற்கு அதிக வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து அதிக வரியைச் சுமக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.